1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
நம் வாழ்வு யார் கையில்? hand
நடந்து போகும்போது கீழே விழுகிறோம். ஏன் என்று கேட்கிறார்கள்? என்ன சொல்வோம்?
கல் தடுக்கி விட்டது என்கிறோம்.  கல் மீது தான் பழி, நான் கல்லைக் கவனிக்காமல் இடறி விழுந்தேன் என்று சொல்கிறோமா? நாம் பொறுப்பை ஏற்கிறோமா?
சமையல் சரியில்லை. ஏன்? உப்பு கூடிவிட்டது என்கிறோம்.  நான் உப்பைக் கூடுதலாகப் போட்டு விட்டேன் என்று சொல்வதில்லையே!
மாணவர் தேர்வில் தோற்கிறார்.  ஏன்? வினாத்தாள் கடினமாக இருந்தது என்கிறார். நான் சரியாகப் படிக்கவில்லை என்று ஒப்புக் கொள்வதில்லை. 
இரண்டு வகைப் பதில்களும் ஒன்றுதானே என்று சிலர் நினைக்கலாம். இல்லை!
முதல் வகை பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் முயற்சி.  தவறுகளை, குறைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதன் வெளிப்பாடு!
நான் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்கிறேன்.  எனக்கு எப்போதும் இப்படித் துன்பமே வருகிறது என்று புலம்புவதற்கு அடித்தளம்! வாழ்வில் தொடர்ந்து சரிவுகளைச் சத்திக்கும் வழித்தடம்.
சின்னச் சின்னத் தவறுகளுக்குக்கூட நாமே பொறுப்பேற்றுக் கொள்ளப் பழகுவோம்! ஒவ்வொரு சிறு சிறு தவறையும் திருத்திக்கொள்ள வழி இருக்கிறது.
படிப்படியாக நமது பலவீனங்கள் குறையும்.  பலங்கள் பெருகும். மெல்ல மெல்ல நாம் உயர வழி கிடைக்கும்.
நம்முடைய வாழ்க்கைப் பயணத்திலும்கூட இந்த இருவகை மனப்போக்கையும் பார்க்கலாம்.
சிலர் எப்போதும் புலம்புவார்கள்.
நான் மட்டும் கொஞ்சம் வசதியாகப் பிறந்து இருந்தால்..
என்னை மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாகப் படிக்க வைத்திருந்தால்...
அந்த வேலை மட்டும் எனக்குக் கிடைத்திருந்தால்...
என் மனைவி மட்டும் கொஞ்சம் உருப்படியாக வாய்த்திருந்தால்..
இப்படிப்பட்ட சிந்தனைகளே நமது தோல்வியை ஒப்புடக கொள்வதின் அடையாளம்.
நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது என்று சொல்லும் வாக்குமூலம்!
நம் தோல்விக்கு மற்றவர்கள்மீது பழிபோடும் முயற்சியின் வெளிப்பாடு மற்றவர்கள் கையில் நம் வாழ்வை ஒப்படைக்கும் அவலத்தின் அடையாளம்.
நமக்குள்ளே இறைவன் தந்திருக்கும் அந்தப் பேராற்றலை நம்பாமல் ஏற்றுக்கொள்ளாமல், பயன்படுத்தாமல் கோட்டை விட்டுவிட்டுப் பரிதவிக்கும் ஏமாறித்தனம்.
கடைசியில் நம் தோல்விக்குக் கடவுள்மீது பழிபோடும் அறியாமை! எனவே நம்முடைய வாழ்வு, நமக்குக் கி‍டைத்திருக்கும் ஒரு கொடை. மிகப்பெரிய வாய்ப்பு. அதை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட வேண்டாம்.
நம் வாழ்வுக்கும், நம் வெற்றிக்கும், நம் மகிழ்ச்சிக்கும் நாமே பொறுப்பெடுத்துக் கொள்வோம்.
குறைகளை ஏற்றுக்‍கொள்வோம்... திருந்துவோம்.. முன்னேறுவோம் நம்முடைய தோல்விக்கும் குறைகளுக்கும் மற்றவர்கள்மேல் பழிபோடும் வழக்கத்தை இன்றே விட்டொழிப்போம்.
பனி மூட்டங்களா? பாறைகளா?
ஓவ்வொரு தனி மனிதருக்கும் சில குறைகள் இருக்கலாம்! அவற்றை நம் முன்னேற்றத்துக்குத் தடைகள் என்று நாம் கருதிக் கலங்கத் தேவையில்லை.  எந்தக் குறையையும் வென்று காட்டமுடியும். இதைத்தான் நாம் ஆதாரங்களோடு இதுவரை பார்த்தோம்.
ஆனாலும் இவையெல்லாம் TIMEஉண்மையான குறைபாடுகள்! வாழ்வின் எதார்த்தம்! போலிகள் அல்ல!
ஆனால் இல்லாத குறைகளையும் தடைகளையும் கண்டு நம்மில் எத்தனை பேர் மயங்குகிறோம்!
புகை மூட்டத்தைப் பூதமாகக் கருதி நடுங்குபவர் நம்மில் எத்தனை பேர்?
கடவுள் பெயரால் எத்தனை சண்டைகள்! கொள்ளைகள், உயிர்ப் பலிகள்.
பேயும் பூதமும் எங்கே இருக்கின்றன? கோழைகள், ஏமாளிகளின் மனதில் மட்டும்தானே இருக்கின்றன? ஆனால் பேய் ஓட்டுவதாகச் சொல்லும் எத்தைனை போலித்தனங்கள்? ஏமாற்று வித்தைகள்?
கடவுள் நமக்கு வழங்கியிருக்கும் கொடைதானே நேரம்? ஒரு நிமிடத்தை இழந்து விட்டால் அதை நம்மால் திரும்பப் பெற முடியுமா? நாம் வாழக் கிடைத்திருக்கிற ஒவ்வொரு நொடியையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா?
‍‍‍ஜாதகம், ஜோசியம், குறி, கோடங்கி போன்றவற்றைத் தேடி நம்மில் எத்தனை பேர் அலைகிறோம்? எத்தனை பேர் கடவுள் கொடுத்த நேரத்தை எமகண்டம், ராகு காலம் என்று வீணடிக்கிறோம்?
நம் தலை எழுத்தை நாமே நிர்ணயிப்பதா? தம் பிழைப்பிற்கே வழியில்லாமல் ஆலமரத்தடியில் உட்கார்ந்திருக்கும் குறிகாரர்களும் ஜோதிடர்களும் நிர்மாணிப்பதா?
இன்று நம்மை ஏமாற்ற எத்தனை எத்தனை போலிகள் புதிதாகக் கிளம்பி இருக்கிறார்கள்?
உங்கள் பெயரில் இரண்டு எழுத்தைக் கூட்டினால், குறைத்தால், மாற்றினால் உங்கள் குறை எல்லாம் தீரும் என்கிறார்கள். அப்படியானல் ஒரே பெயரைக் கொண்ட எல்லாரும் ஒரே வாழ்க்கைத் தரத்தைப் பெற முடியுமா?
மோதிரக்கல்தான் உங்கள் வெற்றியின் ரகசியம் என்கிறார்கள்! வண்ணம் பூசப்பட்ட சாயக்கற்கள் வண்டி வண்டியாய் விலை போகின்றன!
வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் சேர்த்து ஒரு வீட்டைக் கட்டுகிறோம்! அந்த வீட்டை, வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் இடித்து, உடைத்து நம்மை மீண்டும் ஓட்டாண்டி ஆக்குகிறார்கள்!
இந்த வகையான ஏமாற்று வேலைகள் ஏராளமாக நடக்கின்றன! நவீன அறிவியலின் எல்லாக் கருவிகளையும் பயன்படுத்திக்கொண்டு அறிவியல் பார்வையை மறைக்கப் பார்க்கிறார்கள்!
ஏமாறுவதும்! ஏமாறாமல் தப்பிப் பிழைப்பதும் நம் கையில்தான்!
சரி! நமது வளர்ச்சிக்கு நமது புறச்சூழலான நிஜங்களும் தடையில்லை! இந்த வகைப் போலிகளும் தடையில்லை!
குறைகள் தடைகள் அல்ல!
(உடல் ஊனம், வறுமை, குடும்பச் சூழல் போன்றவை நமது வளர்ச்சிக்குத் தடைச் சுவர்களாக இருக்க முடியுமா?)
நாம் மட்டும் இன்னும் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தால்... கொஞ்சம் உயரமாய் இருந்திருந்தால்...
கொஞ்சம் சிவப்பாய் அழகாய் இருந்திருத்தால்...
கொஞ்சம் நன்றாகப் படித்திருத்தால்...
அவளைப்போல் நீண்ட முடியோடு இருந்தால்...
இப்படி ஏராளமான ஏக்கங்கள்!
மற்றவர்களைவிடத் தாம் மோசமாக இருப்பதால்தான் நம்மால் முன்னேற முடியவில்லை என்று நினைக்கிறோம்!
ஏங்குகிறோம்! புலம்புகிறோம்!
ஆனால் இது உண்மையா?
இந்தக் குறைகள் எல்லாம் தடைகளா? இந்தக் குறைகள் நம்மை வெற்றி பெறவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருக்கின்றனவா?
இந்தக் குறைகளை எல்லாம் மீறி வாழ்வில் வெற்றி கண்டவர்கள் இல்லையா?
உலக அழகி கிளியோபாட்ரா ஒரு கறுப்பழகிதானே!
உலகைச் சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் குட்டையானவர்தானே! அவரைவிடக் குட்டையா நாம்?
ஸ்டாலினும், ஆபிரகாம் லிங்கனும் பணக்காரக் குடும்பத்திலா பிறந்தவர்கள்? ஏழைகள்தானே!
நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என்ன ‍அமெரிக்காவில் பிறந்தவரா? நர்சரிப் பள்ளியில் ஆங்கிலம் படித்தாரா?
உடல் ஊனங்களைக்கூட வென்று சாதனை படைப்பவர்கள் எத்தனை பேர்?
மிகப்பெரிய உலகக் கவிஞரான மில்டன் ஒரு பார்வையற்ற மனிதர்!
‍ஹெலன் கெல்லர் என்ற பெண்மணியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருக்குப் பேச்சு வராது! காதும் கேட்காது! பார்வையும் இல்லை.
இந்த உடல் ஊனங்கள் எல்லாவற்றையும் அவர் வென்று முன்னேறிச் சாதனை படைக்கவில்லையா?
மருத்துவர்கள் கைவிட்டுவிட்ட பலர் மீண்டும் நலம்பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டவில்லையா? நடக்கவே கூடாது என்று மருத்துவர்கள் போட்டத் தடையை மீறி ஒலிம்பிக் போட்டியில் ‍ெவற்றி கண்டவர்கள் இல்லையா?
காலையே இழந்த பிறகும், செயற்கைக் காலை வைத்துக்கொண்டு நடனத்துறையில் வெற்றி கண்ட அபூர்வத் தமிழ்ப்பெண்ணை நாம் நம் வாழ்நாளில் பார்த்ததில்லையா?
இவர்கள் எல்லாம் வரலாற்றில் என்றோ ஒருநாள், எங்கோ ஓர் இடத்தில் அத்தி பூத்ததுபோல் தோன்றுபவர்கள்! ஒரு சராசரி மனிதரால் இப்படியெல்லாம் சாதிக்க முடியுமா? என்று சிலர் முணுமுணுக்கக்கூடும்.
சிகரங்களைத் தொட்டவர்களும், தொடுபவர்களும் ஒரு சிலராக இருக்கக்கூடும்! ஆனால் எல்லாத் தடைகளையும் தாண்டி முன்னேறுபவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர்!
கிராமங்களில் ஏழ்மைச் சூழலில் பிறந்து உழைத்து, முன்னேறியவர்கள் ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார்கள்!
வணிகத்துறையில்! அரசுப்பணிகளில்! கல்வித்துறையில்! திரைப்படத்துறையில்!
எந்தத்துறையில் கிராமத்து மண்வாசம் பரப்பவில்லை? எந்தத்துறையில் வறுமை வளமையாக மாறி ஒளி வீசவில்லை?
எனவே குறைகள் எல்லாம் நிறைவாக மாறக்கூடியவைதான்! தடைகள் எல்லாம் தாண்டக் கூடியவைதான்! நம்புவோம். வாழ்வில் முன்னேற்றம் காண்போம்.
=========================================================================
நம்மைக் காதலிப்போம்
நம்மை நமக்கே பிடிக்குமா? இது என்ன அர்த்தமற்ற கேள்வி என்று பலரும் நினைக்கலாம்.
ஆனால் கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பாருங்கள். நம்மை நமக்கு முழுமையாகப் பிடிப்பதில்லை.
நம்மை நாமே முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை.
நான் உயரமாக இல்லை.
நான் கருப்பாக பிறந்து தொலைந்து விட்டேன்.
நான் இன்னும் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கலாம்!
எனக்கு அவனைப் போல் படிப்பு வருவதில்லை..
என் முடி மட்டும் ஏன் கொட்டிப் போகிறது?
இப்படி எத்தனையோ புகைச்சல்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன.
நம்மீது நாமே தேவையில்லாமல் வளர்த்துக் ‍கொண்டே வரும் இந்த வெறுப்புகள் காலப்போக்கில் பூதாகரமான எதிர்மறைச் சிந்தனைகளுக்கு வித்திடுகிறது.
நம்மை ‍ெவறுக்கும் நாம் நம்மைச் சுற்றி இருப்பவர்களை வெறுக்கிறோம். பெற்றோரை, பிள்ளைகளை வெறுக்கிறோம். சமூகத்தை வெறுக்கிறோம்.
வாழ்க்கையையே வெறுத்துத் தற்கொலை வரை பயணிக்கிறோம்.
ஆனால் நாம் நம்மை வெறுப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
நாம் ஒவ்வொருவரும் உண்மையில் ஓர் வித்தியாசமான அற்புதமான படைப்பல்லவா? கடவுளின் ஒரு வித்தியாசமான வெளிப்பாடு அல்லவா?
நம்மைப் போன்றே எல்லாவிதத்திலும் ஒத்து அ‍மைந்த மற்றொரு பிறவி இருக்கிறதா?
இரட்டைக் குழந்தைகள்ககூடக் காலப்போக்கில் வளரும் சூழலில் மாறுபட்டு போவதில்லையா?
ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருப்பதும் செயல்படுவதும்தானே உண்மையில் இயற்கையின் அழகு. உயிர்ப் படைப்பின் சிறப்பு.
எல்லாரும் ஒரே மாதிரியாக, ஒரே வகையான உயரத்தில், நிறத்தில் வாழும் ஒர் உலகைக் கற்பனை செய்து பார்ப்போம்.
அந்த எந்திரமயமான உலகமும் வாழ்க்கையும் உங்களுக்குப் பிடிக்குமா? அந்த எத்திரங்களில் ஒன்றாக நாமிருந்தால் வாழ்க்கை
எப்படி இருக்கும்?
நாம் எந்திரங்கள் இல்லை. வித்தியாசமான இயற்கைப் படைப்புகள். ஒவ்வொருவரும் அற்புதமான ஒரு படைப்பு. இயற்கையின் ஓர் அங்கம். இறைவனின் ஒரு கொடை! ஏன்? இறைவனின் ஒரு வெளிப்பாடு.
இந்த வாழ்க்கைப் பாடத்தை நாம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருவோம். நாம் குறைபாடுகள் நிறைந்தவர்கள் என்று கருதி வருத்தத் தேவையில்லை.
நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள் என்று உணர்ந்து மகிழ்வோம்.
நம்மை நாமே எக்காரணத்துக்காகவும் வெறுக்க வேண்டாம்.
நமது நிறத்தை, உயரத்தை, வடிவத்தை, தலைமுடியை எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வோம்!.

நம்மைப் போலத்தான் மற்றவர்களும். எனவே அவர்களின் வேறுபாடுகள் வித்தியாசங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்வோம்.

நம்மையும், நம் சுற்றத்தினரையும், சூழலையும் காதலிக்கப் பழகுவோம்.
=========================================================================
கடவுளே புலம்பலாமா?
புலம்புவது ஒரு தவறான பழக்கமா? அதனால் என்ன கேடுகள் விளையும்?
என்னங்க நல்லா இருக்கீங்களா?
இது நாம் அடிக்கடி கேட்கும் கேள்விதான். இதற்கு நம்மில் எத்தனை பேர் மலர்ந்த முகத்தோடு நன்றாக இருக்கிறேன் என்று பதில் சொல்கிறோம்?
ஏதோ இருக்கிறேன் ...
என்னத்தே, நான் நல்லா இருந்து...
இப்படிச் சுரத்தையில்லாத பதிலை எத்தனை முறை கேட்டிருக்கிறோம்.
நமக்குள் கடவுளே குடியிருக்கிறார் என்பதை உண்மையாகவே நம்பினால் இப்படிப் பேசுவோமா? புலம்புவோமா?
நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று மற்றவர்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்? கண்பட்டு விடக்கூடாது என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்? மற்றவர்கள் கண்படுவது நமக்குக் கெடுதல் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?
காலையிலிருந்து மாலைவரை எதையாவது நினைத்துப் புலம்பிக் கொண்டே காலம் கழிப்பது சரிதானா?
சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றதுதானே, புலம்புவது அவ்வளவு பெரிய குற்றமா? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆமாம், புலம்புவது உண்மையில் நம்முடைய எதிர்மறைச் சிந்தனைகளின் ஒரு வெளிப்பாடுதான்!
நமது துன்பமும் இன்பமும் பிறரிடமிருந்து வருவதில்லை. நாமே நமக்குள் வருவித்துக் கொள்வதான்.
நம்முடைய எண்ணம் போலத்தான் நம் வாழ்வும் அமையும்.
நல்ல எண்ணங்கள்தான் நல்ல செயல்களுக்கு வித்திடுகின்றன.
அவநம்பிக்கை, தோல்வி மனப்பான்மையை வளர்க்கும் சிந்தனைகள் நம்மை நிச்சயம் தோல்வியில்தான் கொண்டு ‍போய்சேர்க்கும்.
பல மாடிக் கட்டிடங்களுக்கு இடையில் கட்டப்பட்டிருக்கும் இரும்புக் கயிற்றில் நடக்கும் சாகசக்காரன் ஒருவன் இருந்தான். பல ஆண்டுகள் அனுபவம்... ஒரு நாள் சாகச நிகழ்ச்சியின் போது அவன் தவறி விழந்தான். பிழைக்கவில்லை.
அவன் மனைவி சொன்னாள் கடந்த சில நாள்களாகவே தவறி விழுந்து விடுவேனோ என்று ‍அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
தவறி விழுந்து விடுவோம் என்ற எண்ணம் மேலோங்கி விட்டால் அவ்வளவுதான். நாம் தவறுவது உறுதி!
இதைத்தான் இன்று நடத்தையியல் வல்லுநர்கள் எதிர்மறை மனப்பாங்கு (Negative attitude) என்கிறார்கள்.
எப்போதும் ஒரு புன்னகை.. உற்சாகமான சிந்தனை... உற்சாகமான பேச்சு... உற்சாகமான செயல்கள்... சில நாள்கள் தொடர்ந்து இப்படிப் பேசிப் பழகிப் பாருங்கள்...
உங்கள் நம்பிக்கை வட்டமும் நட்பு வட்டமும் மளமளவென்று வளர்ந்துவிடும்!
நல்ல சிந்தனைகளை வளர்ப்போம். அது நல்ல ஆளுமைப்பண்பை (Character) உருவாக்கும்.

நல்ல ஆளுமைப் பண்பை வளர்ப்போம். ‍அது நமது வாழ்வை நிர்ணயிக்கும்.
அதிகாலை நேரமே இனிதான ராகமே...

காதல் கவிதைகள்...

குழல் ஊதும் கண்ணணுக்கு...

நான் தேடும் செவ்வந்திப்பூவிது...

நதியோரம்...

ஊரு சனம்...

பொத்தி வச்ச மல்லிகை...

ஸ்ரீரங்க ரங்கநாதனின்...

சாமிகிட்ட சொல்லிவச்சி...

சங்கீத ஜாதி முல்லை...

சங்கீத ஸ்வரங்கள்...

சிறிய பறவை சிறகை...