கடவுள் பாதி! மனிதர் பாதி!
06102008243
நம் எல்லாரிடமும் இறைப் பண்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் எல்லாரிடத்திலும் எல்லா நேரத்திலும் கடவுள் பண்பு வெளிப்படுவதில்லை.
மிக மிக மோசமானவர்கள் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவர்கள்கூட சில நேரங்களில் மிக அபூர்வமான செயல் திறனையோ, அன்பையோ காட்டி நம்மை அசத்தி விடுவார்கள்.
மிகப்‍பெரிய மகான்கள்கூடச் சில நேரங்களில் சாதாரண மனிதச் சபலங்களுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.
ஒவ்வொருவரிடத்திலும் இறைப் பண்புகளும் மனிதப் பண்புகளும் கலந்துதான் இருக்கின்றன.
இதை நாம் பணிவோடு ஒத்துக்கொள்ள வேண்டும். இதில் கேவலம் எதுவுமில்லை. இதற்கு நாம் மட்டும் தனிப்பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியமில்லை.
நாம் விலங்கினங்களிலிருந்று படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள்தானே. நமது மூளையும் பரிணாம வளர்ச்சியில் விலங்கின மூளையிலிருந்து வளர்ந்து வந்ததுதானே!
விலங்கினத்திலிருந்து நாம் தனிப்பட்டு முன்னேறி வளரத்தொடங்கிப் பத்தாயிரம் ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன.  சுமார் 400 தலைமுறைகள்தான் உருண்டோடி இருக்கின்றன.  இந்த 400 தலைமுறைகளில்தான் நாம் மொழி, நினைவாற்றல், பகுத்தறிவு, ஆன்மீகம் போன்ற திறன்களைப் படிப்படியாக வளர்ந்திருக்கிறோம்.
இந்த வளர்ச்சிகள் தொடர்ந்தாலும் கூட நமது மூளையில் "முடிந்தால் மோது ""முடியாவிட்டால் ஓடு" என்ற சிந்தனைதான் ‍மேலோங்கி நிற்கிறது.  அச்சமும், அடக்கியாளும் வெறியும் அவசர முடிவெடுக்கும் போக்கும் இன்னும் நம்மை விட்டு விலகவில்லை.
மிகச் சிலரது அடக்குமுறைக்குக் கட்டுப்பட்டு, ஏராளமான நம்மைப் போன்ற அ‍டித்தள, நடுத்தட்டு வர்க்க மக்கள், கல்வி அறிவும், சிந்திக்கும் திறனும் இல்லாமல்தான் பல தலைமுறைகள் கழித்திருக்கிறோம்.
மூன்று தலைமுறைகளில்தான் கொஞ்சம் விடுதலைக் காற்றும், கல்வியும், நமது வாழ்க்கைப் போக்கை நாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்திருக்கிறது.  அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்று, வாழ்க்கைத் தரம் உயர உயர நமது வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் பக்குவமடையும்.
மேலை நாடுகள் இந்த வகையில் நிறைய முன்னேறிவிட்டன. அங்கே ஏமாறுபவர்கள் குறைவு எனவே, ஏமாற்றும் வாய்ப்பும் குறைவு. அஞ்சுபவர்கள் குறைவு, எனவே அடாவடித்தனங்களும் குறைவு.
நம்முடைய தமிழகச் சூழலும் இன்று இவ்வகை மாற்றங்களைச் சந்திக்கிறது. நமது வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது.
நாம் ஒவ்வொரும் படிப்படியாக முயன்றால் மனித பலவீனங்களிலிருந்து விடுபட்டு வாழ்வாங்கு வாழலாம்.
ଯ-----------------------------------------------------------------------------------------------------------------ଯ
நமக்குள்ளே ஓரு பேராற்றல்
06102008242 இந்த உலகையும், உலக இயக்கங்களையும், ஏன் பேரண்டத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிற ஒரு மாபெரும் சக்தி இருக்கிறது.
அதை நாம் கடவுள் என்றோ, இயற்கை என்றோ, அல்லா என்றோ, சிவன் என்றோ... எந்தப் பெயர் சொல்லி வேண்டுமானாலும் அழைக்கலாம்.  ஆனால் எந்தப் பெயருக்குள்ளும் அதை அடக்கிவிட முடியாது.
எந்தச் சமய நெறியைப் பின்பற்றியும் அந்தப் பேராற்றலை அடைய முடியும். ஆனால் எந்தச் சமயத்தின் வரையறைக்குள்ளும் அதை அடிக்கிவிட முடியாது.
மெளன மொழி தொடங்கி எந்த மொழி வழியும் கடவுளை நாம் அடைய முடியும். ஆனால் எந்த ‍மொழிக்குள்ளும் அதை அடைத்து வைத்து விட முடியாது.
நம்மால் இன்னும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாத பழமையான காலம் தொட்டு இந்தச் பெருஞ்சக்தி இயங்கிவருகிறது.  ஆனால் எந்த வகையான பழமைவாத மூட நம்பிக்கைகளுக்குள்ளும், போலித் தனங்களுக்குள்ளும் அதை அடக்கி வைத்து விட முடியாது.
காலந்தோறும் மாற்றங்களுக்கு இடம் தந்து புதுப்புது அர்த்தங்களுடன் புதுப்புது பரிமாணங்களை வெளிக்காட்டி உயிர்த்துடிப்புடன் இருப்பதுதான் இறையாற்றல் - பேராற்றல்.
ஒவ்‍வோர் உயிரும், உயிர்த்துடிப்பும் இந்த உயிர்ப் பேராற்றலின் ஓர் அங்கம்தான்.  நாமும் இந்தப் பேராற்றலின் ஓர் அங்கம்தான்.
நாம் ஒவ்வொருவரும் கடவுளின் ஓர் அங்கமாக மாறி ஒன்றுபட்டுச் செயல்படும்போது, புதுப்புது வளர்ச்சியாக... முன்னேற்றமாக...கண்டுபிடிப்பாக...இப்பேராற்றல் வெளிப்படுகிறது.
இந்த மனிதநேய நெறியைத்தான் ஆன்மீக வளர்ச்சிப் பாதையாக்கக் காலம் காலமாக எல்லாச் சமயங்களும் வலியுறுத்தி வந்திருக்கின்றன.
நமக்குள்ளிருக்கும் இந்த உள்ளொளியைப் புரிந்து கொண்டு முறையாகப் பயன்படுத்தினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்றன.
இன்றைய அறிவியல், உளவியல் கருத்துக்களும் இன்று இ‍தை உறுதிப்படுத்துகின்றன.
"நமது உடல் நோய்கள் பலவற்றுக்கும் நமது மன அழுத்தமும் எதிர்மறைச் செயல்களுமே காரணம் என்று மருத்துவம் சொல்கிறது.  எனவே நம்முடைய மனநிலையைச் சரிப்படுத்துவதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம் எனறு இன்றைய மருத்துவம் சொல்கிறது.
தன்னம்பிக்கையும் நேர்வழிச் சிந்தனைகளும் இரத்தப் புற்று நோய் உள்ளிட்ட பல உடல் நோய்களைக் குணமாக்க முடியும் எனறு இன்று மருத்துவ உலகம் ஒப்பைக்கொள்கிறது.
வழிபாடு, விரதம், தியானம் போன்ற முயற்சிகள் உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் வழி சேர்க்கின்றன. எனவே மாத்திரைகளோடு இந்த உத்திகளையும் இன்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்."
நோயை வெல்வதில் மட்டுமன்று வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதில்கூட இந்த அகத்தூண்டுதல் பயன்படும். தன்னம்பிக்கையோடு நேர்வழியில் சிந்தித்து, நேர்வழியிலேயே உறவாடி ‍நேர்விழயிலேயே செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதுதான் இன்றைய உளவியலின் சாரம்.
----------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க்கை ஓர் அனுபவப்பாடம்

வாழப் பழகுவதா? இதென்ன வேடிக்கை! நாமெல்லாம் ஏற்கனவே வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம்?
இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் 06102008241இப்படியொரு கேள்வி நம் மனத்தில் எழத்தான் செய்யும்.
நியாயமான ‍கேள்விதான். நாமெல்லாம் உயிரோடு தினமும் உலாவிக்கொண்டுதான் இருக்கிறோம்.
இளமைப் பருவத்தை ஆட முடிந்தவரை ஆடிக் கழிக்கிறோம். பொறுப்பு வந்த பிறகு பிழைப்புக்கு வழிதேடி அலைகிறோம்.
முடிந்தவரை ‍‍‍‍எல்லா நேரத்தையும் ஊர்க்கதை பேசிக் கழிக்கிறோம். கிழடு தட்டிப் போய்ப் போக வேண்டிய இடத்துக்கும் அவசரமாகவே போய்ச் சேருகிறோம், பல நேரங்களில் நாமே வரவழைத்துக் கொண்ட நோய்களால்!
இது ஒரு வகைச் சுய விமர்சனம்தான்! கொஞ்சம் கடுமையான சுயதரிசனம்! நெஞ்சைத் தொட்டுப் பார்ப்போம்.
நம்மில் எத்தனைபேர் தினமும், ஒவ்வொரு நொடியும் மனநிறைவோடு வாழ்கிறோம்?
நம்மில் எத்தனைபேர் தினமும் நமது முழுத்திறமையையும் பயன்படுத்தி உழைக்கிறோம்? வெற்றி பெறுகிறோம்?
நம்மில் எத்தனை பேர் குடும்பம், சமூக உறவுகளை நிறைவாகக் கவனமாகப் பாதுகாக்கிறோம்?
இனியாவது வாழ வேண்டாமா?
பல்லாயிரம் ஆண்டுகளாகச் சமயங்களும் இலக்கியங்களும் இத்தகைய வழிமுறைக‍ளைச் சொல்லி வந்திருக்கின்றன.
இன்று வாழ்வுக் கலை ஓர் அறிவியல் பார்கையுடன் துல்லியமாக வளர்ந்து கொண்டு வருகிறது.  நாள்தோறும் ஏராளமான செய்திகள்! ஆய்வுகள்! கட்டுரைகள்!
இவை எல்லாவற்றையும் விலாவாரியக எழுதுவது எனது நோக்கமன்று.
அவற்றை விழுந்று விழுந்று படிக்கிற ஆர்வமோ, அதற்கான நேரமோ கூட நமக்கு இருக்கிறதா, என்ன?
உண்மையில் நமது வாழ்க்கையில் சில மிக எளிமையான நல்ல பழக்கங்களை, நடைமுறையில் கற்றுக் கொள்வதன் மூலம் சிறப்பாக மாற்றிக் கொள்ள நம்மால் முடியும்.
---------------------------------------------------------------------------------------------------------
bird4
மனிதனுக்கு ஆறு ‍அறிவு என்கிறோம்.  விலங்குகளுக்கு ஐந்து அறிவு என்கிறோம் இருந்தாலும் மிருகங்களிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உண்டு.
முதல் பாடம்
விலங்குகளுக்குப் பயம் என்பது மிகவும் குறைவு.  மனிதன் எதற்கெடுத்தாலும் பயப்படுகின்றான்.  நடந்ததை நினைத்துப் பயப்படுகிறான்.  நடக்கப்போவதை நினைத்துப் பயப்படுகறான். மற்றவர்களைப் பார்த்து பயப்படுகிறான்.  மரணத்தைப் பார்த்துப் பயப்படுகிறான்.  ஆனால்.. விலங்குகள் அப்படி இல்லை.  தங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்ற நிலையில்தான் விலங்குகள் பயப்படுகின்றன.  ஆபத்து சூழ்நிலை விலகியவுடன் பயமும் விலகிவிடுகிறது.  அதன் பிறகு கவலைப்படாமல் எப்போதும் போல வாழ ஆரம்பித்திவிடுகின்றன.
இரண்டாவது பாடம்
விலங்குகள் தோல்வியைக் கண்டு பயப்படுவதில்லை.  மனிதன் அப்படியில்லை.  தவறவிட்ட பேருந்துக்காகத் தலையில் கையை வைத்துக் கொண்டு வருந்துகின்றவர்கள் உண்டு.  பரிட்சையில் தோல்வியா?  கவலை! தேர்தலில் தோல்வியா? கவலை! ஏதாவது ஒரு வாய்ப்பு கைநழுவிப் போய்விடுகிறதா? உடனே கவலை!. ஒரு பூனை எலியைத் துரத்துகிறது.  ‍அந்த எலி சாமாத்தியமாக ஒரு வலைக்குள் புகுந்து தப்பித்துவிடுகிறது.  ‍அதற்காக அந்தப் பூனை ஐயோ.. ஏமாந்து போனோ‍மே! என்று அழ ஆரம்பித்துவிடுவதில்லை போகிறவர்கள் வருகிறவர்களிடமெல்லாம் அதைச் சொல்லிப் புலம்புவத்தில்லை.
மூன்றாவது பாடம்
இது ஒரு வியப்பான செய்திதான்.  விலங்குகள் அவற்றின் குட்டிகளுக்கு ஆரம்பகாலத்தில் உணவு கொண்டு வந்து கொடுக்கின்றன.  குட்டி கொஞ்சம் வளர்ந்த பிறகு எப்படி வேட்டையாடுவது?  எப்படி நீந்துவது? எப்படி ஓடுவது? என்பதையெல்லாம் கற்றுக் கொடுக்கின்றன.  அதன் பிறகு குட்டிகள் தாமாகவே பிழைத்துக் கொள்ளட்டும் என்று முடிவு ‍செய்து அவற்றைத் தனியே விட்டுவிடுகின்றன. 
அதன் பிறகு குட்டிகளைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.  குட்டிகளும் தனித்துப் போராடி வாழ்ந்து காட்டும்.  மனிதன் அப்படியில்லை.  மகனையும் விடமாட்டான். பேரனையும் விடமாட்டான்! அப்படிச்செய்... இப்படிச்செய்.. என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான்.  கடைசி வரை அவர்கள் கூடவே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவான்.
உனக்கு அனுபவம் பத்தாது. பெரியவங்க சொல்றதைக் கேள் என்பான்.  இப்படியாக அடுத்த தலைமுறையின் சுயமான வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் முட்டுக்கட்டைப் போடுவது மனிதனின் இயல்பு.
நான்காவது பாடம்
விலங்குகள் எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதில்லை.  நாளைக்கு நல்லபடியாக விடியவேண்டுமே என்ற கவலை நமக்குத்தான்.  எதிர்காலம்... ‍அடுத்த தலைமுறை... இப்படிக் கற்பனை பண்ணிப் பயந்று அதற்காக சேர்த்துவைக்க வேண்டுமே என்பதற்காக இன்றைக்குப் படாதபாடுபடுகிறவன் மனிதன்.
சிங்கம் பசி எடுத்த பிறகுதான் இரை தேடவே ஆரம்பிக்கிறது. அவ்வளவு தன்னம்பிக்கை. பறவைகள் மழைக்காலம் வந்து விட்டால் தேவைப்படுமே என்பதற்காக மட்டும் கொஞ்சம் சேர்த்து வைப்பதுண்டு.  எப்போவோ வரப்போகிற தேவையை எண்ணி இப்பவே நடுங்குகிற பழக்கம் விலங்குகளிடம் இல்லை. நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பெரிய ஞானிகள் நமக்கு புத்தி சொல்கிறார்கள்.
விலங்குகள் ஏற்கனவே அப்படித்தான் வாழ்ந்து கொள்டிருக்கின்றன.
ஐந்தாவது பாடம்.
விலங்குகள் அவையும் வாழும். ‍ அடுத்ததையும் வாழுவிடும்‍.  எலியும்-பூனையும், சிங்கமும்-மானும் எதிரிகள்தான், இருந்தாலும் தேவைக்கு மீறிப் பசிக்கு அதிகமாக எந்த விலங்கையும் அவை கொல்வதில்லை. காடுகளில் எல்லா விலங்குகளும் வாழமுடிவதற்கு இந்த சகிப்புத் தன்மைதான் காரணம்.  ஆக இவையெல்லாம் நாம் விலங்குகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.
வாழ்வில் சிலநேரம்  சிலர் எப்போதோ நமக்கு எதிராக நடப்பதுண்டு. ஆனால் அவர்கள் எப்போதும் நமக்கு எதிரிகள் அல்லர்.
சில நேரம், நம்மைக் கால் நீட்டிக் கவிழ்த்தவர்களே நம்மைக் கைகொடுத்து தூக்கி விடுபவர்களாகவும் மாறக்கூடும்.

வாழ்வில் சிலநேரம்  கோபப்படும்படி நேரும். ‍கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குக் ‍கோபப்படும் உரிமை நமக்கு உண்டு. ஆனால், கோபப்பட வேண்டிய விஷயங்களுக்குக் கொடூரமாக நடந்துகொள்ள நமக்கு ஒருபோதும் உரிமையில்லை.

வாழ்வில் சிலநேரம்  நம்மேல் அடர்த்தியான அன்பு கொண்டவர்கள் அதை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். அவர்களின் ‍அன்பும் பிரார்த்தனைகளும் நம் கவசமாக இருப்பது நம் கண்ணுக்குத் தெரியாமலே போகலாம்.

வாழ்வில் சிலநேரம்   நாம் நினைத்தது நடக்காமல் போகலாம். ஆனால், வாழ்வில் நமக்குத் தேவையானது நிச்சயம் நடந்து கொண்டிருக்கிறது. ‍அந்த நன்றியுணர்வு அரும்பினால் வாழ்க்கையின் முழுமையான நன்மைகள் நம் வசமாகும்.

வாழ்வில் சிலநேரம்  உள்ளத்தை நொறுக்கும்படியான சம்பவங்கள் நிகழும். நம் துயரத்திற்காக உலகம் நின்று விடாது என்பதை உணர்ந்தால் நம்முடைய பயணங்கள் தொடரும்.

வாழ்வில் சிலநேரம்  நண்பர்களின் மனநிலைகள் மாறும். இதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்குத்தான் நண்பர்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை நேரும்.

வாழ்வில் சிலநேரம்   சில ரகசியங்களை அறிந்றுகொள்ள முடியாமலேயே போகும். அவற்றை அறிந்து கொள்ளாமல் இருப்பது நல்லதாகவே இருக்கும்.

வாழ்வில் சிலநேரம்  உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டிவரும். தவறினால், அந்த உணர்ச்சிகள் நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கும்.

வாழ்வில் சிலநேரம்  கடுமையான முடிவுகளை எடுக்க நேரும். ‍அந்த முடிவின் அழுத்தத்தை மனதிலிருந்று அகற்றுவதற்கே முதலிடம் தர வேண்டும்.