வெற்றுக் கனவுகள் எவை? வாழ்வில் வெற்றி பெற நாம் காணும் கனவுகள் எப்படிப்பட்டவையாக அ‍மைய வேண்டும்?
வாழ்க்கை என்ற தேர் வெற்றிப் பாதையில் நகர மூன்று குதிரைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும் அறிவு, உணர்வு, செயல்திறன்.
உணர்வுத் திறனையும் அறிவுக் கூர்மையையும் வளர்த்துக் கொள்ளும் வழிகளைப்பற்றி இதுவரை பார்த்தோம்.
செயல்திறன் என்கிற குதிரைதான் மையமாக இருக்க ‍வேண்டிய குதிரை. பல சிறந்த, அறிவாற்றல் நிறைந்த சிந்தனையாளர்கள் கூடத் தூங்கி வழிந்து தோற்றுப் போவதை நாம் பார்க்கிறோம். நல்ல உணர்வுப் பக்குவம் உடையவர்கள் கூடச் செயல்படாவிட்டால் பயனில்லை.thinkrs
எனவே வெற்றிக்குச் செயல்திறன் மிக மிக அவசியம். வெற்றிக்கு வழிகாட்டும், பல நூல்கள் இன்று வெளிவருகின்றன. இவை பெறும்பாலும் செயல்திறன் வளர்ச்சி பற்றித்தான் வலியுறுத்துகின்றன.
வெற்றிக்கு அடித்தளம் கனவு என்கிறார்கள்! உயர்ந்த கனவு! லட்சியக் கனவு! நெடு நோக்குடைய கனவு! ஆனால் கனவு மட்டும் போதுமா? கனவு மெய்ப்பட வேண்டாமா? அதற்கு என்ன செய்வது?
நம்மில் பலரும் ஆசைப்படுகிறோம். கனவும் காண்கிறோம்! நான் மட்டும் ஒரு கோடீசுவரனாக இருந்தால்... நான் மட்டும் முதலமைச்சரானால்...
இது வெறும் பகல் கனவு! செயலுக்கு வழி ஏதும் வகுக்காத கனவு!வெற்றுக் கனவு!
இப்படிப்பட்ட கனவுகள் பல நேரங்களில் கையில் இருப்பதையும் அழித்துவிடும்! ஒரு கதை! கேள்விப்பட்டிருந்ததாலும் இங்கே நினைவுப்படுத்திக் கொள்வோம்.
முட்டை விற்பதற்காகத் தலையில் கூடையுடன் நடந்து போகிற பெண் பகற்கனவு காண்கிறாள்! அதிக லாபம் பெற்று... மேலும் அதிக முட்டை விற்று முட்டைக்கடையே வைத்து... வீடு கட்டி... நகை போட்டு... ‍ஜொலிப்பேன்... என்னைக் கட்டிக் கொள்ள ஆண்கள் வரிசையில் வருவார்கள்... மாட்டேன் மாட்டேன் என்று தலையை ஆட்டுவேன்... என்று தலையை ஆட்டிப் பார்த்தாள்.  முட்டைக்கூடை கீ‍ழே விழுந்தது.  முட்டைகள் உடைந்து நொறுங்கின. இது முட்டையில் கட்டிய கனவுக்கோட்டை.
இன்னும் சிலர் அவசரக் கனவு காண்கிறார்கள்... பணத்தை இரட்டிப்பாக்கும் உத்தி... பல தவறான குறுக்கு வழிகள்... இப்படிப்பட்ட குறுக்குவழிக் கனவுகள் எங்கே கொண்டு போய்விடும்... உள்ளத்தையும் இழந்து விட்டு நடுத்தெருவுக்கு வருவதைத் தவிர வேறு வழி?
இன்னும் சிலர் எதையாவது செய்து கொண்டிருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்புகிறார்கள்... இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்! ஓடி ஆடி அலைந்து கொண்டே இருப்பார்கள்! கடைசியில் என்ன மிச்சம் என்று கேளுங்கள்! ஒன்றும் இருக்காது!
ஓர் இளைஞன் எதிரே வந்த பெரியவரைப் பார்த்துக் கேட்டானாம், இந்தப் பாதை எங்கே போகிறது?
பெரியவர் கேட்டார், தம்பி நீ எங்கே போக வேண்டும்?
பையன் குறிப்பாக எங்குமில்லை.
பெரியவர் சொன்னார் அப்படியானால் போய்க்கொண்டிரு, இந்தப் பாதை எங்குப் போனால் என்ன?
இன்று இந்த இளைஞனைப் போலத்தான் நிறையப் போர் இருக்கிறோம்.  ஒவ்வொரு நாளும் மளமளவென்று எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோம்.  எதற்காகச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம் என்று தெரியாமலேயே பல வேலைகளைச் செய்கிறோம்.
பகல் கனவு! குறுக்கு வழிக் கனவு! தெளிவில்லாத கனவு! செயல்படாமல் மந்திரத்தில் மாங்காய் காய்த்துவிடும் என்று ஜோதிடத்தை நம்பிக் காத்துக்கிடக்கும் சோம்பல் கனவு!
இந்தக் கனவுகள் எதுவும் நமது வெற்றிக்குப் பயன்படாது.
நாம் நிச்சயம் கனவு காண வேண்டும். இளம் வயது முதலே சிறந்த இலட்சியக் கணவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்! ஆனால் அது செயல்படுத்தக் கூடிய கனவாக இருக்க வேண்டும். செயலுக்குரிய அடுத்தக் கட்டங்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டக் கூடிய கனவாக இருக்கவேண்டும்.
எங்கே எப்படிப் போகவேண்டும் என்பதைப் படிப்படியாக பட்டியலிட்டு சுட்டிக்காட்டும் கனவாக இருக்கவேண்டும்.
பகல் கனவு, குறுக்கு வழிக் கனவு, அவசரக் கனவு, சோம்பல் கனவு என வெற்றுக் கனவுகள் பலவகை! நாம் காணும் வெற்றிக் கனவு தெளிவானதாக, விரிவானதாக, படிப்படியாகச் செயலுக்கு வழிகாட்டக் கூடியதாக இருக்க வேண்டும்.
கல்வி ஒரு கடைச்சரக்கா? அல்லது சந்தைப்பொருளா? மாற்றுவது யார் பொறுப்பு?
உலகெங்கும் பெரும்பாலான மனிதர்கள் வேளாண்மையையும் உடல் உழைப்பையும் நம்பித்தான் வாழ்ந்தார்கள். கல்வி மிகச் சிலருடைய ஏகபோகச் சொத்தாகத்தான் இருந்தது. நம் நாட்டிலும் மேலை நாட்டினர் வரும்வரை கல்வி என்பது ஒரு சில குறிப்பிட்ட இனத்தவரின் தனிச்சொத்தாகத்தான் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட அனைவருக்கும் கல்வி வழங்கும் முயற்சி தொடங்கவில்லை.
பல தலைமுறைகளாகக் கல்வி கற்று வந்தவர்கள் ஆங்கி‍லேய ஆட்சிக்குத் தேவையான எல்லா அரசுப் பணிகளிலும் இடம் பிடித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் கல்வி பற்றி ஆங்கிலேய அரசும் கவலைப்படவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட நம் நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 10% சதவிதம்தான்.
ஆனால் கடந்த நூறு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளை நோக்கி நாம் வெகுவாக முன்னேறி இருக்கிறோம்.
கிறித்துவ நிறுவனங்கள் பட்டி தொட்டிகளில் எல்லாம் கல்வி நிறுவனங்களையும் சுகாதார மையங்களையும் ‍தொடங்கின. இவை ஆல விருட்சமாகி இன்னும் தொடர்ந்து வளர்கின்றன. சாதிப் பாகுபாடில்லாத கல்வி கிட்டியது.indira-kamaraj
1920களில் பிற்பட்ட சமூகத்தவருக்கும் வாய்ப்புகள் பெருகும் வகையில் இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தது. பல நூற்றாண்டுகள் கல்வியில் பின்தங்கிக் கிடந்த சமூகங்கள் முன்னேற்றம் கண்டன.
1950களில் காமராஜர் அரசுப் பள்ளிகளைப் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் கொண்டு சென்றார். பல தாளாளர்கள் கல்வி நிலையங்களுக்கு இடம் கட்டடம் என்று வசதிகள் செய்து கொடுத்தார்கள். கல்வி ஒரு தொண்டாக வளர்ந்தது. அரசே பல உயர்கல்வி நிறுவனங்களையும் உருவாக்கியது.
1980களில் கல்வி பயில விரும்புவோரின் எண்ணிக்கை பெருகியது. அரசு போதிய நிதியை ஒதுக்கி அனைவருக்கம் கல்வி வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் வளர்ந்தன அரசு கல்விக் கட்டணங்களையும், இட ஒதுக்கீட்டையும் உயர்கல்வித்துறையில் செயல்படுத்தியது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற சமுதாயக் கடமை ஒரளவு நிலை நாட்டப்பட்டது.
இன்று இந்நிலை மாறிக் கல்வித்துறையே ஒரு சந்தைக் கடையாக மாறிக்கொண்டிருக்கிறது.
நர்சரிப் பள்ளிகள் புற்றீசல்களாக முளைத்து ஏழைகளின் பணத்தைச் சுரண்டுகின்றன.
அரசுத்துறையில் உள்ள பள்ளிகள், ஆசிரியர், பெற்றோர், அரசு இயந்திரம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கால் பின்தள்ளப்பட்டு விட்டன.
போட்டிகளைச் சமாளித்து வளரும் மிகச்சில தனியார் பள்ளிகள் ஏராளமாகக் கட்டணம் வசூலிக்கின்றன. ஏழைகளும் பின்தங்கியவர்களும் இந்தப் பள்ளிகளுக்குள் நுழையவே முடியாத நிலை.
ஆயிரக்கணக்கில் பணம் கட்டி 'டியூசன்' போக வேண்டிய நிலை. கடுமையாகி வரும் பாடத்திட்டத்தையும் நுழைவுத் தேர்வையும் சந்திக்க முடியாமல் பல நகர்ப்புற ஏழை மாணவர்கள் பின்தங்கிப் போகின்றனர்.
இதையும் தாண்டி உயர்கல்விக்குப் போனால், ஆண்டுக்கு 80,000 ரூபாய் வரை அரசே நிர்ணயித்த கட்டணச் செலவுகள்! அதற்குமேல் நன்கொடை... இது போதாதாம்! தனியார் கல்வி நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வசூலிக்கலாம்... இடஒதுக்கீடும் சட்டப்படி செல்லாது... என்கிறது உச்ச நீதிமன்றம்...THINK_EDU
இது அறிவு யுகம்! எல்லாத் தரப்பினரும் இதில் போதிய அக்கறை காட்டவேண்டும்.
மாணவர்கள் இன்றைய போட்டிச் சூழலை நன்றாக உணர்ந்து, இளமையிலேயே முடிந்தவரை தங்களை அறிவுத்தரத்தில் உயர்த்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கல்விக் கடமையை உணரவேண்டும். பணம் பண்ண வேண்டியதுதான்.  ஆனால் பிள்ளைகளுக்கு உரிய கல்வியை பொறுப்போடும் கனிவோடும் நாம் வழங்கியாக வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடத்தையைக் கவனிக்க வேண்டும். பள்ளிகளையும் கவனிக்க வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்கள் மிகப் பொறுப்போடு செயல்பட வேண்டிய நேரம் இது. கல்வி ஒரு சந்தை அன்று! சமூகத் தொண்டு! அ‍தை வெறும் ஏமாற்றுச் சத்தையாக மாற்ற நினைக்கும் நிறுவனங்கள் காலப்போக்கில் கடுமையாக விளைவுகளைச் சந்திக்க நேரும்!
உண்மையில் நாம் ஒவ்வொருவருமே கல்வித்துறை வளர ஏதாவது செய்ய வேண்டும். சொல்லித் தரலாம்! இளைஞர்களுக்கு ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். ஒரு சில ஏழைப் பிள்ளைகளின் படிப்புக்கு உதவலாம்! வசதியுள்ளவர்கள் கோயிலுக்குச் செலவிடும் பணத்தைக்கூட, ஏழைக் குழந்‍தைகளை வளர்த்தெடுக்கப் பயன்படுத்தலாம்.
அரசியல்வாதிகளும் தங்கள் கடமையை உணர வேண்டும். பல புதிய தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் நலத்துக்காக சமூக நலத்தைக் காற்றில் பறக்கவிட்டு விடக்கூடாது.edu2
ஒரு சமுதாயம் எந்த அளவுக்கு விழிப்பாய் இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அது வளரும். அது தேர்வு செய்யும் குடியாட்சியும் அமையும்.
கல்வி கற்பதில் அனைவர்க்கும் சம வாய்ப்பை உருவாக்கும் திசையிலிருந்து கடந்த சில வருடங்களாக மிகவும் வேகமாக விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். கல்வி ஒரு சமூகக் கொடையாக எப்போதும் இருக்கவேண்டும். சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்தினருக்கும் இதை நிலைநாட்டும் பொறுப்பு இருக்கிறது.
படைப்பாற்றல் மிகச்சில மேதைகளிடம் மட்டுமே காணப்படும் பண்பா? நாம் ஒவ்‍வொருவரும் படைப்பாளிகளாக முடியுமா?
புதுமையையும், மாறுபாடான சூழலையும் விரும்பும் மனநிலை நம் ஒவ்‍வொருவரிடமும் இருக்கிறது. புது வகையான உணவு, மாறுபட்ட ஒரு சுற்றுலா மையம், மாறுபட்ட இசை, பாடல், கோயில், குளம் இப்படி எல்லாமே நமக்குப் பிடிக்கும். அரைத்த மாவையே அரைப்பதை நாம் விரும்புவதில்லை.
நம் ஒவ்வொருவரின் ரசனைக்கும் ஏற்ற மாறுபாடான மனிதர்கள், வாய்ப்புகள், இயற்கைச் சூழ்நிலைகள் எல்லாமே இந்தப் பூமியில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையன்று, பல புதுமைகள் மலர்கின்றன! வித்தியாசமான இச்சூழ்நிலையை, இயற்கை தரும் கொடை என்று சிலர் சொல்கிறார்கள். இறைவனின் படைப்பாற்றல் ‍‍என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.wall image
நம்மைப் பொறுத்தவரை இரண்டு பார்வைகளும் ஒன்றுதான். ஒன்று படைப்பைப் போற்றுகிறது. மற்றொன்று படைப்புக்கான சில காரணங்களைப் போற்றுகிறது.
ஆனால் ப‍டைப்பாற்றல் இறைவனுக்கு மட்டும்தான் சொந்தமா? இறைவனைத் தவிர வேறுயாரும் புதியவற்றைப் படைப்பதில்லையா?
இப்படி யாரும் கருதுவதில்லை. நம்மில் பலரும் ஒவ்வொரு துறையிலும் ஒரு சில மேதாவிகள் (Genius) படைப்பாற்றல் மிகுந்தவர்களாக (Highly Creative) இருப்பதைக் காண்கிறோம்.
இசையில் ஓர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்...
நடிப்பில் ஒரு சிவாஜி கணேசன், கமலஹாசன்...
ஓவியத்தில் ஒரு ஹூசேன்...
கிரிக்கெட்டில் ஒரு தெண்டுல்கர்...
சதுரங்கத்தில் ஒர் ஆனந்த்...
இப்படிச் சிலரை மட்டும் நாம் படைப்பாளிகள், மேதைகள் என்று ஏற்றுக்கொள்கிறோம்! ஆனால் இவர்கள் மட்டும்தான் படைப்பாளிகளா? நம்மைப்போன்ற மற்றவர்கள் எல்லாம் படைப்பாற்றலே இல்லாதவர்களா?
இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் இறைப்பண்பு நிறைந்திருக்கிறது. இறைவனின் ஆற்றல் நம்மிடம் குறைந்த ‍அளவில் உள்ளது. நாம் அதனை வளர்ப்பது... நிறைவு படுத்துவது.. அ‍னைத்தும் நமது முயற்சியைப் பொறுத்தது.
புதிது புதிதாகச் சிந்திப்பதும் வியப்பூட்டும் வகையில் வித்தியாசமாகச் செயல்படுவதும்கூட ஓர் இறைப்பண்புதான்! அந்தப் பண்பும் நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் ஒளிந்து கிடக்கிறது. ஆம்! நாம் ஒவ்வொருவரும் உண்மையில் படைப்பாளிதான். படைப்பாற்றல் (Creativity)  என்பதற்கு தன்னிகர் இல்லாத, மற்றவர்களால் எட்டவே முடியாத திறமை (Un-attainable excellence) என்று நாம் பொருள் கொள்ளத் தேவையில்லை! இது நம்மை நாமே குறைவாக மதிப்பிட வைக்கும்.
நாம் செய்யும் எந்த ஒரு பணியையும், மற்றவர்கள் விரும்பி ஏற்கும் வகையில் இன்னும் கொஞ்சம் புதுமையாக, இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்யலாம். அதுதான் படைப்பாற்றல். இத்தகைய படைப்பாற்றல் நம்மைச்சுற்றிப் பலரிடம் இருக்கிறது. பல்வேறு பணிகளிலும் இது வெளிப்படுகிறது.
உங்கள் பகுதியில் பல்வேறு பலசரக்குக் கடைகள் இருக்கலாம்! ஆனால் ஒரே ஒரு கடை மட்டும் சக்கைப் ‍போடு போடும்...
ஒரே ஒரு ஜவுளிக்கடை வெற்றிக்கொடி கட்டிப் பறக்கும்...
ஒரே ஒரு உணவு விடுதி பலரையும் கவரும்..
‍அதெல்லாம் ஒரு ராசி என்று சொல்லிவிட்டு நம் போக்கில் போய்க்கொண்டிருப்பது ஏமாளித்தனம்.
வெற்றி பெறும் ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு புதுப்புது உத்திகளைக் கையாள்கிறது! வெவ்வேறு வகைகளில் பொதுமக்கள் விரும்புவதை, விரும்பும் வகையில் வாரிக்கொடுக்கிறது. நம்மாலும் கையாளக்கூடிய எளிய உத்திகளாக அவை இருக்கும். நம்மாலும் அந்த உத்திகளைக் கற்றுக் கொள்ள முடியும். புதுப்புது உத்திகளை நாமே உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.
படைப்பாற்றலை மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் பயன்படுத்துகின்றன என்று நினைத்துவிடாதீர்கள்!
பல சின்னஞ்சிறு தனிமனிதர்களிடமும் இந்தப் படைப்பாற்றலைப் பார்க்கலாம். தெருவெல்லாம் நம்மூரில் டீக்கடைதான். ஒரு கடையில் கூட்டம் அலைமோதும்! அடுத்த கடையில் ஈ மொய்க்கும்!
ஒரே ஒரு ஆசிரியரை மட்டும் மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும்! ஒ‍ரே ஒரு சமையல்காரர்!! ஒரே ஒரு தையல்காரர்!!
ஒரே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட வித்தியாசமான வெற்றி மனிதர்களை நமது பகுதியில் நம்மைச் சுற்றி நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
நாம் எந்தத் துறையில் பணி செய்கிறோமா அந்தத் துறையிலும் அத்தகைய படைப்பாளிகள் இருக்கக்கூடும். ஏன்? நாமே நமது முயற்சிகளில், சில நேரங்களில் இப்படிச் செயல்பட்டு வெற்றி ‍பெற்றிருக்க முடியும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமக்குள்ளே ஒளிந்து கிடக்கும் இந்தப் படைப்பாற்ற‍லை வளர்த்துக் கொள்வதுதான்.
கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திக்க வேண்டியதுதான்! மற்றவர்கள் விரும்பும் வகையில் அதைச் செயல்படுத்த ‍வேண்டியதுதான்! படைப்பாற்றல் என்பது இவ்வளவுதான்!
மீண்டும் மீண்டும் இப்படியே சிந்தித்துச் செயல்படுகின்ற செயல்திறனை வளர்த்துக் கொண்டால் நாமே ஒரு பெரிய படைப்பாளி ஆகிவிடுவோம்.
‍‍ஆன்மீகம் மாறாத உண்மைகளைப் பற்றிப் பேசுகிறதே! அப்படி என்றால் அறிவும் அறிவியலும் ஆன்மீகத்துக்குப் பகையா?
நமது அறிவு, அறிவியல், தொழில்நுட்பப் பயன்பாடு, வாழ்க்கைத்தரம் எல்லாமே வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மிக மிக வேகமாகவே வளர்ந்து வருகிறது.
ஆனால் மனித இயல்பு அவ்வளவு விரைவாக மாறவில்லை என்பதை நம்மால் மறுக்க முடியாது. மனித சுபாவம், பொறாமை, பேராசை, மற்றவர்களை அ‍டிமைப்படுத்தும் ஆர்வம் இவையெல்லாம் மறையவில்லை! குறையவில்லை. 
3000 வருடங்களுக்கு முன்னால் உலகெங்கும் மன்னராட்சி மலர்ந்தது. ஆண்டான், ‍அடிமை என்ற மனப்போக்கும் வளர்ந்தது. ஆடு மாடுகளைப்போல் மனிதர்களும் விலைபேசி விற்கப்பட்டார்கள். சாதியம், பெண்ணடிமைத்தனங்கள் போன்ற சமூக அநீதிகளும் போர்களும், கொள்ளை, கொலைகளும் பெருகின.
இந்தச் சமயத்தில் மனித இனம் உய்வு பெற இறைநம்பிக்கை வளர்க்கப்பட்டது. எல்லா ஆற்றல்களும், எல்லா நன்மைத்தனங்களும் நிறைந்த ஒரு பரம்பொருளை நாம் நம்பி வழிபடுவதன் பயன் உணரப்பட்டது. உணர்த்தப்பட்டது! உலகின் பல்வேறு பகுதிகளில் புத்த பெருமான், கிருஷ்ண பெருமான், இயேசு பெருமான், நபிகள் நாயகம் போன்றோர் ஆன்மிக நெறிகளை வளர்த்தனர்.‍budda
‍தொடங்கப்பட்ட இடம், காலத்தைப் பொறுத்துச் சமயங்கள் வேறுபடலாம். ஆனால் எல்லாச் சமயங்களும் ஒரே ஆன்மீக நெறியைத் தான் வலியுறுத்துகின்றன.
ஆன்மிக நெறியின் மூன்று கூறுக‍ளைக் காண்போம்.
1. கடவுள், உண்மை, நீதி. நேர்‍மை போன்ற நற்பண்புகள் ஆகியன எப்போதும் வெல்லும் என்ற நம்பிக்கை.
2. தனி மனித சுயக் கட்டுப்பாடு ஒழுக்கமான செயல்கள் (Self Discipline)
3. உயிர்கள் அனைத்தையும் சமமாகப் பாவிக்கும் மனித நேயம், அன்பு, சகோதரத்துவம்.
நல்ல சமுதாய வளர்ச்சிக்கு இந்த ஆன்மீகப் பண்புகள் நிச்சயம் பயன்படும். இந்த உண்மைகள் என்றென்றும் நிலையானவை. மாறாதவை, அழியாதவை.
ஒவ்வொரு சமய நூலும் இந்த மாறாத ஆன்மீக ‍நெறியைத்தான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் வலியுறுத்துகின்றன.
நவீன உளவியல், பழகும் பாங்கியல் ஆய்வுகள்கூட இந்த ஆன்மீகப் பயிற்சிகள் தனிமனித நலத்துக்கும் சமூக நலத்துக்கும் பெரிதும் பயன்படுவதை மறுக்கவில்லை.
புத்தரும், இயேசுவும், நபிகளும் சமயத்தை ஒரு சமூக இயக்கமாகத்தான் வளர்க்க முயன்றார்கள். காலப் போக்கில் இவை சமயங்களாக நிறுவன விதிமுறைகளுக்குள் இறுகிவிட்டன. முடியாட்சியும் சமயமும் பல நேரத்தில் கை சேர்த்துக் கொண்டன. அதிகார அமைப்புகளும் ஆண்டான் அடிமை வேறுபாடுகளும் மீண்டும் தலைதூக்கின. மனித நேயத்தை வலியுறுத்தப் பிறந்த சமயங்களே தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டன.
"சமய நிறுவனங்கள் சொல்வனயாவும் விவாதத்துக்கு அப்பாற்பட்ட உண்மைகள், மாறாத உண்மைகள்" என்கிற ஒரு சிந்தனைப் போக்கு காலப்போக்கில் உருவானது.  இதுதான் மூடநம்பிக்கைகள் வளரக் காரணமாக அமைந்தது.
பிறப்பிலிருந்து இறப்புவரை எத்தனை எத்தனை விதமான மூடநம்பிக்கைகள்... ஏமாற்றுவேலைகள்... வறுமையையும் சமூக அநீதிகளையும் நியாயப்படுத்துகின்ற மூட நம்பிக்கைகள்...
சமயத்தின் பெயரால் மனிதர்களை ஏமாற்றுவதும் எளிதானது! தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது பழமொழி.  இப்போது தாடி வைத்தகனெல்லாம் போலிச்சாமியாராகும் வாய்ப்பு இருக்கிறது. காவல்துறையே எத்தனை முறை ‍‍‍அம்பலப்படுத்திய பிறகும் இப்படிப்பட்ட போலிகளுக்கு இன்னும் மவுசு குறையவில்லை!
இவ்வகை மூடநம்பிக்கைகளுக்கு எதிரானதுதான் பகுத்தறிவு இயக்கங்கள். வளர்ந்த நாடுகளில் கல்வியும் அறிவும் வளர வளர இந்த வகை மூட நம்பிக்கைகள் குறைந்து வருகின்றன.
நம் நாட்டிலும்கூட கல்வி அறிவும் பகுத்தறிவுச் சிந்தனையும் வளர்ந்த பகுதிகளில் மூடநம்பிக்கைகளும் குறைந்து வருவதைக் காணலாம்.
எனவே, ஆன்மீகம் நம்மை நல்வழிப்படுத்தி வந்திருக்கிறது. நல்வழிப்படுத்த நம்மோடு இருக்க வேண்டும். நம்மோடு இருக்கும் அதில் சந்தேகம் ஏதும் இல்லை.
ஆனால் நமது ஆன்மீகம் சமய எல்லைகளைக் கடந்த புதிய விரிந்த மனித நேய ஆன்மீகமாக மலர வேண்டும்.
‍எல்லாச் சமயத்தவரும் அவரவர் வழிபாட்டு நெறிகளையும் தனிமனிதக் கட்டுப்பாடு நெறிகளையும் பின்பற்றும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஆனால் மனித நேயம் எல்லாச் சமயத்தவரையும், ஏன் சமய நம்பிக்கை இல்லாதவரையும்கூட ஒன்றுபடுத்த வேண்டும்.
சமய நம்பிக்கைகள் அறிவுத் தேடல்களுக்கும், அறிவியல் பார்வைக்கும் குறுக்கே நிற்கக்கூடாது. பகுத்தறிவுக்குப் பொருந்தாத தவறான நம்பிக்கைகளை விட்டொழிக்கச் சமய நம்பிக்கையுடைய நாம் முயலவேண்டும்.
உலகின் மாபெறும் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு ஆன்மீகவாதிதான்! எனவே ஆன்மீகத்துக்கும் பகுத்தறிவுக்கும் பகை தேவையில்லை. சமுதாய வளர்ச்சிக்கு இவை இரண்டும் முரண்படாமல் இயைந்த ஓர் ஆன்மீகப் பகுத்தறிவுப் பாதை தேவை.
நம்முடைய முன்னோர்கள் எல்லாருமே நம்மைவிடப் புத்திசாலிகளா? அறிவாளிகளா?
நம்முடைய முன்னோர்கள் எல்லாம் நம்மைவிட அ‍றிவாளிகள்! அவர்களுக்கு எல்லாமே‍ தெரியும்! அவர்களுக்குத் தொரியாததையா இப்போது நாம் கண்டுபிடித்துவிடப் போகிறோம்! இப்படிப் பழம்பெருமை பேசிச் சீரழிகிற மனப்போக்கு நம்மிடம் இருக்கிறது.
பழமை போற்றப்பட வேண்டியதுதான்! மதிக்கப்பட வேண்டியதுதான்! ஆனால் பழமையிலேயே காலூன்றி நிற்க முயலலாமா? அது முடியுமா? அது வளர்ச்சியாகுமா? வளர்ச்சியும் மாற்றமும் இல்லாத எதுவும் உயிர்த்துடிப்பு இல்லாத வெறும் சக்கையாகி விடாதா?
உயிர்த்துடிப்பில்லாத மனிதர் வளர முடியுமா?  உயிர்த்து‍டிப்பில்லாத சமுதாயம்தான் வளர முடியுமா?
அறிவு என்பதே ஒரு தேடல்தான் உண்‍மையைத் தேடும் முயற்சி. இந்தத் தேடல் வாழ்வு முழுவதும் தொடர்கிறது. புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.ashimo
20,000 வருடங்களுக்கு முன்னால் மனிதருக்கு நெருப்புப் பற்ற வைக்கக்கூடத் தெரியாதே! அந்த மனிதர்கள் நம்மைவிட அ‍றிவாளிகளா?
10,000 வருடங்களுக்கு முன்னால் பயிர்செய்யத் தெரியாமல் காட்டில் அலைந்தாரே! அவர் நம்மைவிட அறிவாளியா?
5,000 வருடங்களுக்கு முன்னால் சக்கரங்கள் பூட்டிய வண்டியைக்கூட அறியாது இருந்த மனிதர் நம்மைவிட அறிவாளியா?
100 வருடங்குளுக்கு முன்னாள் தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, விமானம், கார் போன்ற எதையும் அறியாத மக்கள் ‍எல்லாருமே அறிவாளிகளா?
முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் யாருமே அறிவாளிகள் இல்லை என்று நாம் வாதிடவில்லை.
ஒவ்வொரு காலக் கட்டத்திலும், சில குறிப்பிட்ட இடங்களில் சில குறிப்பிட்ட துறைகளில் சில அறிவாளிகள் தோன்றியிருக்கிறார்கள்! நாம் வாழ் வழிகாட்டி இருக்கிறார்கள். சிலர் காலத்தை வென்று இன்றும் நம் நெஞ்சில் இடம் பிடித்திருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் அறிவு என்பது ஒரு சமுதாயச் சொத்து! காலம் கடந்து அது வளர்கிறது! ஒவ்வொரு நாளும் அது வளர்கிறது. ஒவ்வொரு புதிய தலைமுறையும் அதற்கு முந்திய தலைமுறையின் தோளில் ஏறி நிற்கிறது. பழைய தலைமுறையைவிட அதிகமான அறிவைப் பெறுகிறது. தொழில் நுட்பத்தைப் பெறுகிறது.
அறிவென்பது தலைமுறை தலைமுறையாக வளரும் ஓர் ஆலமரம். ஒவ்வொரு அறிவுத்துறையும் மேலும் மேலும் கிளைவிட்டு வளர்ந்து கொண்டே போகிறது. காலம் நகர நகர இந்த வளர்ச்சியின் வேகம் மேலும் மேலும் அதிகரிக்கிறது.
எனவே நாம் நம் முன்னோர் சொல்லி வைத்த எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதும், அப்படியே பின்பற்றுவதும் சரிதானா?
சோதிடத்திலும், ரேகை பார்ப்பதிலும், குருவி சோதிடத்திலும், மூழ்கிக் கிடக்கலாமா? எண் சோதிடம் நம்மை என்ன செய்யும்? இறைவன் படைத்த உலகில் அவன் வழங்கும் நேரத்தில் கெட்ட நேரம் என்று எதுவும் இருக்க முடியுமா? ‍ பொன் போன்ற காலத்தை வீணடிக்கும் வேதனையல்லவா இது?
குழந்தை வளர்ப்பில் எவ்வளவு மூடநம்பிக்கைகள்! அறிவார்ந்த சமுதாயங்கள் உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றன. பழமைவாதம் பேசி மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயங்கள் பின்தள்ளப்படுகின்றன.
நம் நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது உண்மைதான். ஆனால் அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டாமா?
எனவே நாமும் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடுவோம். அறிவுப்பூர்வமாகச் சிந்திப்போம். மற்றவர்களையும் அப்படிச் சிந்திக்கத் தூண்டுவோம்.
[அறிவுக்கூர்மையை வகைப்படுத்த முடியுமா? புத்திசாலித்தனம் எத்தனை வகை?]
எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா! என்று பாடக் கேட்டிருக்கிறோம். மகிழ்ச்சியும், இன்பமும் தருகின்ற எத்தனையோ வாய்ப்புகள் உலகில் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அறிவு மட்டும் ஒரே ஒரு வகையாக இருக்க முடியுமா?
படித்தவர்கள் மட்டும்தான் ‍அறிவுடையவர்கள் என்று பொதுவாகச் சொல்லிக் கொள்கிறோம்! இது எவ்வளவு மேலோட்டமான சிந்தனைப் போக்கு!
அடிப்படைக்கல்வி நிச்சயம் எல்img_education_bigலோருக்கும் தேவை. உயர்நிலை, மேல்நிலைக் கல்வியை நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்! நாட்டில் படிக்காத ஒரு பிள்ளை கூட இருக்கக் கூடாது. சரிதான்.
ஆனால், வாழ்க்கைக்கு இந்தப் படிப்பும் இதைத்தாண்டிய பட்டங்களும் மட்டும் போதாது. ஒவ்வொருவரும், அவரவர் வாழ்வுக்குத் தேவையான அறிவுக் கூர்மையை, புத்திசாலித்தனத்தை (Intelligence) வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். சிறந்த விளையாட்டு வீரர், இசைமேதை, பாடகர், சிறந்த நடிகர், ஓவியர், வியாபாரி, பேச்சாளர், சிறந்த மருத்துவர், சிற்பி, ஆசிரியர், அரசியல்வாதி, சிறந்த கட்டக் கலைஞர், போர் வீரர்! இவர்கள் எல்லாரும் புத்திசாலிகள்தானே!
இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகைப் புத்திசாலித்தனம் மேலோங்கி நிற்கிறது ‍அந்தத் துறையில் அவர்கள் தங்கள் அறிவுக் கூர்மையை வளர்த்துக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
நரம்பியல் (Neuroscience) அறிஞர்கள் கடந்த சில ஆண்டுகளில் இந்த புத்திசாலித்தனங்கள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள்.
எல்லா வகைப் புத்திசாலித்தனங்களையும் இவர்கள் ஏழு பொது வகைகளாக வகைப்படுத்தி இருக்கிறார்கள்.smintelligence
1.கணிதம், தர்க்கம் (Mathematical Logical) கணினித்துறை, பல்வேறு பொறியியல் ஆய்வுத்துறைகள், நீதித்துறை சிக்கல்களைத் தீர்க்கும் திறன்...
2.‍‍மொழித்திறன், பேச்சுத்திறன் (Linguistics,Oratory) சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், படைப்பாளிகள்..
3.ஓவியம், சிற்பப் பார்வை (painting, Sculpture) ஓவியர்கள், சிற்பிகள், கட்டட வடிவமைப்பாளர்கள், உட்புற அழகுக் கலைஞகர்கள்...
4.உடலியக்கம் (Kinesics) விளையாட்டு வீரர்கள், நடன, நாடகக் கலைஞர்கள், அழகிகள், ஆண் அழகர்கள், போர் வீரர்கள்...
5.இசை, தாளலயம் (Musical Rythmic) நல்ல பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இசை வல்லுநர்கள்...
6.அக ஆய்வாளர்கள் (Intra Personal) தத்துவ மேதைகள், தியான வல்லுநர்கள், மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்கள், மன நல மருத்துவர்கள்...
7.மனித உறவு (Inter Personal) பல்வேறு வகை வணிகர்கள், பல்வேறு வகைக் கலைஞர்கள், அரசியல்வாதிகள், நல்ல ஆசிரியர்கள்...
நம் ஒவ்‍வொருவருக்கு உள்ளேயும் இந்த ஏழு வகை அறிவுக் கூர்மைகளில் குறைந்தபட்சம் ஒன்றாவது ஒளிந்து கொண்டிருக்கிறது.
இந்த உள்ளார்ந்த திறமையை (Innate Talent) இளமையிலேயே அடையாளம் கண்டு வளர்த்துக் கொண்டால் நாம் நிச்சயம் அந்தத் துறையில் வெற்றி பெறலாம்!
நமது குழந்தைகள் எல்லாரும் ஒரே ஒரு குறிப்பிட்ட துறையில்தான் முன்னுக்கு வரவேண்டும் என்று நாம் ‍அடம்பிடிக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அவர்களை வளர விடலாமே!
இளம் வயதிலே கோட்டை விட்டு விட்டோமே என்று கவலைப்படத் தேவையில்லை. எந்த வயதிலும் நாம் ஏதாவது ஒரு துறையில் நமது அறிவுக்கூர்மையை வளர்த்துக் கொண்டு வெற்றி பெற முடியும்.
சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட அ‍றிவுக்கூர்மையை பெற்றவர்களாக இருப்பார்கள். சிலர் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு துறையில் வல்லுநர்களாக இருப்பார்கள் பிறகு வேறொரு அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள். பொறியியல் வல்லுநர் எழுத்தாளராக மாறலாம் (எழுத்தாளர் சுஜாதா) நடிகர் அரசியல்வாதி ஆகலாம்.
விஞ்ஞானி மனித வள மேம்பாட்டு வல்லுநராக மாறலாம் (குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்) படிப்பு மட்டுமே புத்திசாலித்தனம் அல்ல என்பதை ஆழமாக மனதில் பதிய வைப்போம். நமக்கு ஏற்ற புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்வோம். புத்திசாலிகள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை மதித்துப் போற்றக் கற்றுக்கொள்வோம்.
‍[செய்திக‍ளைத் தெரிந்து வைத்திருப்பது மட்டும் கல்வியாகி விடுமா? எது உண்மையான கல்வி?]
அறிவு, கல்வி, படிப்பு எல்லாவற்றையுமே நாம் கிட்டத்தட்ட ஒன்று என்கிற பாவனையில்தான் நினைத்துக் கொள்கிறோம். "அவரு ரொம்பப் படிச்சவரப்பா" என்று சொல்கிறோம். படித்தவர்களெல்லாம் அறிவாளிகள் என்கிற நினைப்பு இங்கே தொக்கி நிற்கிறது.alphabet
புத்தகப் புழுக்கள் நாட்டில் ஏராளம்! சில பேர் எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் அலைகிறார்கள்! நமது பிள்ளைகள் கூட எப்போதும் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று பார்க்கிறோம்! (அவர்கள் புத்தகத்தை வைத்துக் ‍கொண்டு என்ன செய்கிறார்கள் என்று பார்க்கிறோமா என்பது வேறு கேள்வி)
இன்று நாட்டில் படித்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்! ஏராளமான பட்டங்களை மேலும் மேலும் வாங்கிக் குவிப்பவர்களும் இருக்கிறார்கள்.
நமது கேள்வி ஒன்றுதான். இப்படிப் படித்தவர்கள் எல்லாம் வாழ்வில் வெற்றி பெறுகிறார்களா? வாழத் தெரிந்தவர்கள் என்பதற்கு நாம் சுட்டும் படிப்பு ஓர் அளவுகோலாக முடியுமா? படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளா?
நாம் படிக்கும் பாடப் புத்தகம், பொது அறிவு நூல்கள், இலக்கியங்கள், செய்தித்தாள்கள் எல்லாமே வெவ்வேறு வகையான செய்திகளின் தொகுப்பு. 
இச்‍செய்திகளை நாம் தேர்வு நேரத்தில் ஒரளவுக்குச் சரியாகச் சொல்லித் தேவையான மதிப்பெண்களைப் பெற்றுவிட்டால் நாம் தேறிவிடுகிறோம், பட்டத்தையும் வாங்கி விடுகிறோம்.
அறிவாற்றல் என்பது இதையும் தாண்டியது!
இன்னும் ஒரு படி மேலே போகலாம்! நாம் படித்தவற்றை நன்றாகப் புரிந்து கொண்டிருப்போம்! நன்றாக வரிசைப்படுத்தி நினைவில் கூட வைத்திருப்போம்!
யார் எந்த நேரத்தில் எந்த விஷயம் பற்றிக் கேட்டாலும் உடனே இப்படிப்பட்டவர்கள் பதில் சொல்ல முடியும்! தகவலைத் தர முடியும்! "நடமாடும் நூல் நிலையம், எல்லாம் தெரிந்த மனிதர், விவரமான ஆள்"  என்றெல்லாம் இவர்களை நாம் குறிப்பிடுகிறோம். இப்படிப்பட்டவர்களை நாம் அறிவாளிகள் என்று ஒப்புக்கொள்ளலாமா? அப்படியானால் நம்ம வீட்டுக் கணக்குப் பிள்ளைகள் எல்லாம் அறிவாளிகளா? அலுவலக ஊழியர்கள் எல்லாம் அறிவாளிகளா?
நூலகர்கள் ஏராளமான நூல்களையே நமக்கு அடையாளம் காட்டுவார்கள்! இன்றைய கணிப்பொறிகள் இன்னும் அதகமான செய்திகளைத் தொகுத்து வைத்திருக்கின்றன! கணிப்பொறிகள் அறிவாளிகளா?
அறிவு, அறிவாற்றல், புத்திசாலித்தனம் என்பது உண்மையில் இந்த எல்லைகளைக் கடந்தது!education
படித்துக் தெரிந்து கொள்வது அறிவின் ஒரு பரிமானம். பார்த்து, கேட்டு, பழகித் தெரிந்து கொள்வதும் அறிவின் மற்றொரு பரிமாணம்!
நாம் தெரிந்துகொண்ட செய்திகள் சரியா? தவறா? என்று மதிப்பிட்டு உண்மையைக் கண்டறிவதும் அறிவின் மற்றொரு கூறு! இவ்வாறு பகுத்தறிந்த செய்தியை உரிய நேரத்தில், உரிய விதத்தில் பயன்படுத் தெரிந்திருப்பது அறிவின் நிறைவான பகுதி!
அறிவு ஒரு கருவி! நம்மைக் காக்கும் கருவி! நம்மை வளர வைக்கும் கருவி! இத்தகைய அறிவை நமது கல்வி நமக்குத் தந்திருக்கிறதா? நாம் முயன்று இத்தகைய அறிவை வளர்த்து கொண்டிருக்கிறோமா?
நமது குழந்தைகள் இத்தகைய அறிவைப் பெறுகிறார்களா? அதை நம் ஆசிரியப் பெருமக்கள் உறுதி செய்கிறார்களா? படிக்கும் பருவத்தோடு இத்தகைய அறிவைப் பெறும் முயற்சியை நாம் நிறுத்திக் கொள்ளலாமா? அப்படி நிறுத்திக் கொள்ள முடியுமா?
வாழ்நாள் எ‍ல்லாம் நம்முடைய அறிவு என்ற கருவியை நாம் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டாமா? அறிவுத் தேடல் ஒரு தொடர் முயற்சியாக அமைய வேண்டாமா? அதற்கு நாம் என்ன செய்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? இதைப்பற்றி நம் சிந்தனைத் தேடல் தொடரட்டும்.
[நமது வாழ்வில் உணர்ச்சிகள் எந்த அளவுக்குத் தேவை? அ‍வை எப்போது ஆபத்தானவையாக மாறுகின்றன?]
"எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுகிறாயே" என்று நாம் பலரைப் பார்த்துச் சொல்கிறோம்.  பலரும் நம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள்! அப்படியானால் உணர்ச்சிகள் கூடாதா?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! அது உணர்ச்சிக்கும் பொருந்தும்.feeling
உணர்ச்சியில்லாமல் வாழ்வில்லை. ஆசை, காதல், ‍அன்பு, இரக்கம், கோபம், பயம்! இப்படி எல்லாவகை உணர்ச்சிகளும் கலந்ததுதான் வாழ்க்கை! ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு உணர்ச்சிக்கு நாம் ஆட்படுவோம்! அது இயற்கைதான்!
ஆனால், 'என்னை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்' என்று நாம் வருந்தும்படி ஆகிவிடக்கூடாது.
உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கக்கூடாது. அவை நமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்.
விலங்கினங்கள் உணர்ச்சியால் உந்தப்பட்டுத்தான் வாழ்கின்றன. கோபமும் (முடிந்ததால் மோது) பயமும்தான் (முடியாவிட்டால் ஓடு) விலங்குகளின் அடிப்படை உணர்ச்சிகள்!
விலங்குகளின் மூளையில் அமிகதலா என்ற ஒரு பகுதிதான் இந்த உணர்ச்சிகளின் பிறப்பிடம். னம்முடைய மூளையிலும் இதே பகுதி இருக்கிறது. அதைப் போலே செயல்படுகிறது!
ஆனால் நமது மூளையில் நிதானமாக, அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து முடிவெடுக்கும் பகுதிகள் நன்றாகவே வளர்ந்திருக்கின்றன. "நமக்கு நினைவாற்றலும் மிகுதி! ஆனால் ஒன்று இந்த அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து வழிகாட்டும் பகுதி கொஞ்சம் மெதுவாகத்தான் செயல்படும்"
முதலில் கோபம்! அப்புறம்தான் யோசனை! முதலில் பயம்! அப்புறம்தான் நிதானம்! முதலில் அடிதடி! அப்புறம் வாழ்நாளெல்லாம் வருத்தம்!
நாம் உணர்ச்சிவசப்படும் போது, அதற்கு ஏற்ற நிகழ்ச்சியைப் பார்க்கும் போது, கேட்கும் போது, கொஞ்சம் நிதானம் காட்டப் பழக வேண்டும். சில நிமிடங்கள் இடைவெளி கி‍டைத்தால் கூட போதும். நமது மூளை ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கிவிடும்.
ஆனால், அந்த ஒரு சில நிமிட நிதானத்தை நாம்தான் பழகிக்கொள்ள வேண்டும். இதைத்தான் உணர்வுப் பக்குவம் (Emotional Maturity) என்கிறார்கள்.
வயது ஆக, ஆகத்தான் இப்படிப்பட்ட பக்குவம் எல்லாம் வரும் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
இன்று உளவியல் மிக ‍வேகமாக வளர்ந்திருக்கிறது! சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே உணர்வுப் பக்குவத்தைப் பழகிக்கொள்ள இன்று வழி இருக்கிறது.
இதைப்பற்றி இன்று ஏராளமான செய்திகள்! ஆராய்ச்சிகள்! வானொலி! தொலைக்காட்சி உரைகள்! எனவே இதை நாம் இங்கே மேலும் விவரிக்கத் தேவையில்லை!
ஆனால் ஒரே ஒரு அடிப்படைப் பாடத்தை மட்டும் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வோம்.
எந்த உணர்வானாலும் சரி, அதிக ஆழமாக, அதிகக் காலம் அகப்பட்டுக் கொண்டு அடிமையானால் அதனால் ஆழமான மனக்காயங்களும் தீய விளைவுகளும் உருவாகும்.
எவர் மீதும் அதிகமாகக் கோபப்படாதீர்கள்! எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மன்னித்து மறந்துவிடுங்கள்!
எவருக்கும், எதற்கும் அளவுக்கு மீறிப் பயப்படவேண்டாம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் பயத்திலிருந்து விலகித் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எதன்மீதும், எவர்மீதும் அளவுக்கதிகமான பகையையோ, பொறாமையையோ வளர்த்துக்கொள்ள வேண்டாம்.  ஏன் அளவுக்கதிகமான வெளித்தனமான அன்புகூட ஆபத்தானதுதான்.
மற்றவர்களை மட்டுமன்று, நம்மையே நாம் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.
நமது கடந்த காலத் தவறுகளையும் ஏமாளித்தனங்களையும் நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்கக்கூடாது. ஏராளமான மன நோயாளிகள் இன்னும் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது!
மொத்தத்தில் நமது மனம் மிகையான உணர்ச்சிகளில் அழுத்திக் கடினப்பட்டுக் போகாமல் காப்பாற்றிக்கொள்வோம்! நமது மனம் கல்லாக உணர்ச்சிகளால் இறுகிப் போக வேண்டாம்.  மெல்ல மெல்ல கனமில்லாமல், மென்மையாகக் கனியட்டும். சுமையில்லாத வாழ்வுக்கு சுலபமான வழி இது!
வாழ்க்கை சுமையா? சுவையா? அதை நா‍மே சுவையாக மாற்றிக் கொள்ள முடியுமா? எப்படி?
பாகற்காய் கசக்கும்தான்! ஆனால் அ‍தை விரும்பிச் சாப்பிடுபவர்கள் ஏராளம். பாகற்காயின் மருத்துக் குணங்களுக்காக அல்ல! கசப்பைச் சுவைப்பவர்களே ஏராளம்.
சர்க்கரை இனிப்புதான்! ஆனால் இனிப்பை வெறுப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். தங்களுக்குச் சர்க்கரை நோய் இருப்பதால் இனிப்பை வெறுப்பவர்களைச் சொல்லவில்லை! இனிப்புச் சுகையே பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள்.
வாழ்க்கை கசக்கிறதா? இனிக்கிறதா? என்ற கேள்விக்குரிய பதிலும் இப்படிப்பட்டதுதான்.
‍ஒரே வகுப்பு! ஒரே பாடம்! சிலருக்குப் பாடம் பிடிக்கிறது. சிலருக்குப் பிடிக்கவில்லை! காரணம் பாடமா அல்லது படிப்பவரின் மனநிலையா?
பலர் தேர்வை எழுதுகிறார்கள். முதல் மதிப்பெண் கிடைக்கவில்லையே என்று பலர் அழுகிறார்கள்! கடைசி வரிசையில் பலர் வழக்கம் போல் சிரிக்கிறார்கள்.  காரணம் மதிப்பெண்களா? மனநிலையா?
கடன் ஒரு பெரிய வாழ்க்கைச் சுமைதான். என் நண்பர் ஒருவர் பல சகோதரிகளுக்கு மணம் முடித்துத் தந்தையாய் நின்றவர். கடன் சுமையில்லா நாளில்லை! ஆனால் எப்போதும் மகிழ்ச்சிப் புன்னகை. "கடன் சுமையைச் சுமப்பதே ஒரு சுவையாகிப் போய்விட்டது" என்கிறார்!
மகிழ்ச்சியாக வாழும் ஏழைகளும் உண்lifeடு!
சோகத்தில் மூழ்சியிருக்கும் பணக்காரர்களும் உண்டு!
படித்த ஏமாளிகளும் உண்டு! படிக்காத மேதைகளும் உண்டு!
வாழ்க்கை சுவையா, சுமையா என்பது நாம் எங்கே எப்படி இருக்கி‍றோம் என்பதைப் பொறுத்தது அன்று! நமது சூழல் நமக்குச் சாதகமாக இருக்கிறதா என்பதைப் பொறுத்ததும் அன்று!
வாழ்வின் சுவையும் சுமையும் நமக்கு வெளியே இல்லை! அது நமக்குள்ளே இருக்கிறது! சுவைக்க தெரிந்த மனிதருக்கு வாழ்க்கை கரும்பு! சுவைக்கத் தெரியாத மனிதருக்கு அதுவே கற்பாறை!
வாழ்க்கை சுவையானது என்று நாம் உறுதியாக நம்பினால் அது சுவையானதுதான். அதுவே சுமையானது என்று நாம் உறுதியாக நம்பினால் அது நிச்சயம் சுமையானதுதான்.
வாழ்க்கை சுமை என்று நாம் உறுதியாக நம்பினால் அது நிச்சயம் (Negative Thinking) எதிர்மறைப் பார்வை (Negative Outlook) என்பார்கள்.
இந்தப் பார்வை உடையவர்கள் தங்களையே நம்ப மாட்டார்கள். துணிச்சலாகப் புதிய முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள்.
முன்னேறுபவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள், குமுறுவார்கள், மற்றவர்களையும் நம்ப மாட்டார்கள்! இவர்களுக்கு நல்ல உறவும் நட்பும் குறைவாகவே இருக்கும்.
மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை இவர்களைப் பற்றிக் கொள்ளும். மன இறுக்கம் தொடர்பான இரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் இவர்களைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
வாழ்க்கை சுவை என்று கருதுபவர்களை நாம் நேர்வழிச் சிந்தனையாளர்கள் (Positive Thinkers) என்கிறோம்.
இவர்கள் எப்போதும் புன்னகையோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படுவார்கள்.  தயங்காமல் புதிய முயற்சிகளில் இறங்குவார்கள். தோல்வியைக் கண்டு கலங்க மாட்டார்கள்.
தங்கள் முயற்சிகளில் மற்றவர்களையும் சேர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு எல்லா பக்கங்களிலும் நட்பும் உதவியும் காத்திருக்கும்.
மிகக்கடுமையான நோய்கள்கூட இவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்காது! இத்தகைய மனநலம் அதிசயிக்கத் தகுந்த உடல் நலத்தைக் கொடுப்பதும் உண்டு.
நமக்குத் தேவை வாழ்வு சுமை என்கிற சரிவுப் பார்வை அன்று! வாழ்க்கை சுவை என்கிற உயர்வுப் பார்வைதான்!
ஓவ்வொருவருக்கும் உளவியல்
மன நோயாளிகளைப் பற்றிய நமது சமூகப் பார்வை மிக மிகத் தவறானதாகவே இருக்கிறது. நம் சொந்தக் குடும்பத்தைச் ‍சேர்ந்த மன நோயாளிகளைக்கூட நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அவர்களை மதிப்பதில்லை. மன நல மருத்துவரிடம் கூட்டிச் செல்வதில்லை. அவர்களைக் கட்டிபோட்டுத் துன்பைறுத்துகிறோம்! அடித்து உதைக்கிறோம். கடவுள் முன் அவர்களைக் கட்டிப்போட்டு வதைக்கிறோம்.CMHRimage
இந்த மனப்பாங்கு மாற வேண்டும். உண்மையில் மன நோயும் ஒரு வகை உடல் நோய்தான். நரம்பு மண்டலக் குறைபாடு காரணமாக ஏற்படும் நோய்! மருந்து, மருத்துவம், அன்பு, பாதுகாப்பு மூலம் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்த முடியும். மனநோயாளிகளில் மிகமிகச் சிறிய சதவிகிதத்தினர் மட்டும்தான் முரட்டுத்தனமாகச் செயல்படுவார்கள்.  இவர்களை மருத்துவ மனைகளில் வைத்துக் குணப்படுத்தலாம்.
மூளை, நரம்பியல் குறைபாடுகள் இன்று எல்லாத்தரப்பு மக்களிடையிலும், எல்லா வயதிலும் கண்டறியப்படுகின்றன. மருத்துவம் மூலம் சரி செய்யப்படுகின்றன. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்! தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் இளைஞர்கள்! நினைவாற்றலை இழக்கும் முதியவர்கள்! இவர்களுக்கெல்லாம் இன்று உளவியல் துணை நிற்கிறது!
இப்படிப்பட்ட நரம்பியல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மட்டும்தான் உளவியலா? இல்லை, எல்லோருக்குமா?
நம் ஒவ்வொருவருக்கும் உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அ‍‍தேபோல் மன நலமும் முக்கியம்!
உடல் நலத்தைப் பாதுகாக்க பல வழிகள் இருப்பதுபோல் மன நலத்தைப் பாதுகாக்கவும் பல வழிகளை நமது முன்னோர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
இறை வழிபாடு நமது மன நலத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது!‍தோல்வியையும் துன்பத்தையும் கண்டு துவண்டு போகாமலிருக்க வழிபாடு துணை நிற்கிறது!
வெற்றிக் களிப்பில் வரும் ஆணவத்தால் நாம் அழிந்து போகாமல் இருக்கவும் தன்னடக்கத்தை வளர்க்கவும் வழிபாடு பயன்படுகிறது.
மன ‍அழுத்தம், மன இறுக்கத்தைக் குறைக்கத் தியான முறைகள் பயன்படுகின்றன! எத்தனை எத்தனை வகையான தியான முறைகள்! அவற்றுக்கு உலகெங்கும் இன்று எவ்வளவு பெரிய வரவேற்பு.
இப்படிக் காலம் காலமாக நமது மனநல வளர்ச்சிக்குப் பயன்பட்டு வந்த வழிபாடு, தியானம், தத்துவம் சார்ந்த பல்வேறு முயற்சிகளின் இன்றைய அறிவியல் வடிவம்தான் உளவியல். இன்றைய உளவியல் வல்லுநர்கள் ‍நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதோடு நிற்பதில்லை.
இன்றைய அவசர உலகில், உணர்வுகள் பாதிக்கப்பட்டு, உறவுகள் சிதைவடைந்து வாழும் பலருக்கும் உளவியல் மருத்துவம் செய்கிறது. ‍அத்தோடு ஆலோசனையும் கூறி வழிகாட்டுகிறது.
குடும்கச் சிக்கல்கள், கனவன், மனைவி, குழந்தைகளின் உறவு மேம்பட உதவி! அலுவலக மன உளைச்சலிலிருந்து விடுபட வழிமுறைகள்! முதியவர் மனநலப் பயிற்சிகள்! மாணவர், தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சிகள்!
இப்படி நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உளவியல் வழி காட்டுகிறது!
ஆன்மீகவாதிகள் பலரும் இன்று இந்த உளவியல் நெறிகளுடன் கலந்து நமக்கு வழிகாட்ட முன் வருகிறார்கள்.
நம் ஒவ்வொருவருக்கும் மனநலம் முக்கியம். ஆன்மீக வழியிலோ, உளவியல் வழியிலோ அல்லது .இரண்டும் கலந்த வழியிலோ, நமது மன நலத்தைப் பேணி வளர்த்துக் கொள்வோம்.
நம் மனநலத்தைப் பேணி வளர்ப்பது எப்படி? நல்ல கேளிவிதான்! இதற்கு விடை தேடும் முன்னால் ‍வேறொரு கேள்வி!
நமக்கு வாழ்க்கை இனிக்கிறதா? கசக்கிறதா?
நமது வாழ்வின் வெற்றிக்குப் புத்திசாலித்தனம் (I.Q) மட்டும் போதுமா? வேறு என்ன பண்புகள் வேண்டும்?
நம்மைச் சுற்றியிருக்கும் சூழலை மாற்றுவதைவிடச் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு வெற்றி பெறுவதுதான் சிறந்தது என்று பார்த்தோம். சரிதான்!
நாம் சூழலை எப்படிப் புரிந்து கொள்வது? அதற்கேற்ப நம்மை எப்படி மாற்றிக் கொள்வது? எப்படிச் செயல்படுவது? எப்படி வெற்றி பெறுவது?
நாம் நம் ஒவ்வொருவரையுமே ஒரு தேருக்கு ஒப்பிடலாம். அந்தத் தேரை மூன்று குதிரைகள் ஒன்றுகூடி நகர்த்துகின்றன.
ஒன்று அறிவு, புத்திசாலித்தனம், அறிவுக்கூர்மை.
நாம் எந்நதத் துறையில் வெற்றி பெற வேண்டும் என்றாலும், அதற்குரிய அறிவு வேண்டும்.  இதுதான் நமது தேருக்குத் தேவையான முதல் குதிரை.craft3horse-01
ஆனால் அறிவுடையவர்கள் எல்லாம் வெற்றி பெற்று விடுகிறார்களா? எத்தனையோ புத்திசாலிகளின் வாழ்க்கை படுதோல்வியில் முடித்திருக்கிறது.
நெடுங்காலமாக அறிவை (Intelligence) மட்டும்தான் ஒருவரது வெற்றிக்கு அடிப்படை என்று கருதி வந்தார்கள். நம் ஒவ்வொருவரின் அறிவுக்கூர்மையை அளப்பதற்கும் முயன்றார்கள். அறிவுக்கூர்மைக் கோவை (Intelligence Quotient (or) IQ) என்று குறியீட்டையே இதற்காக உருவாக்கினார்கள்.
உலகில் உள்ள எல்லா மனிதர்களின் வெற்றி வாய்ப்புகளையும் இந்த IQவை வைத்து அளந்துவிடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் நடக்கவில்லை.
கடந்த முப்பது வருடங்களில் நம்முடைய அ‍றிவுக்கூர்மையைவிட, நம்முடைய உணர்வுப் பக்குவம், நாம் வெற்றி பெறப் பெரிதும் பயன்படுகிறது என்பதை உளவியல் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
நம்முடைய குறைநிளைகளோடு நாம் நம்மையே ஏற்றுக்கொள்கிறோமா? நம்மீதே நம்பிக்கை இருக்கிறதா? ‍கோபம், பயம் போன்ற உணர்வுகளை நம்மால் வெற்றி கொள்ள முடிகிறதா?
மற்றவர்களிடம் நாம் எப்படிப் பேசுகிறோம்? பழகுகிறோம்? போட்டி என்று வரும்போது அதை எப்படி நளினமாகக் கையாள்கிறோம்?
இவையெல்லாம் நமது வெற்றி வாய்ப்பை நிச்சயம் மாற்றுமல்லவா? அன்றாட வாழ்க்கையில் இப்படிப்பட்டவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறார்கள்! நல்ல பிள்ளை பிழைத்துக் கொள்வார் என்றெல்லாம் உணர்வுப் பக்குவம் நிறைந்தவர்களை நாம் பாராட்டுகிறோம்! வரவேற்கிறோம்!
இந்த உணர்வுப் பக்குவம்தான் நமது வெற்றித் தேரின் இரண்டாவது குதிரை.  இதைப் பற்றியும் நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. அறிவுக் கோவையைப் போல (IQ) உணர்வுக் கோவையை (Emotional Quotient - EQ) மதிப்பிடும் உத்திகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அறிவும், மற்றவர்களுடன் உறவாடும் பாங்கும் மட்டும் இருந்துவிட்டால் போதுமா? வெற்றிப் பாதையைத் திட்டப்படி அடைய விடாமுயற்சி வேண்டுமல்லவா? எடுத்த காரியத்தை முடிவு வரை தொடரும் திறன் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும் திறன், இவையெல்லாம் வேண்டுமே!
இந்த விடாமுயற்சிதான் நமது வெற்றித்தேரின் மூன்றாவது குதிரை. விடாமுயற்சிக் கோவை (Persistence Quotient - PQ) என்று இதை அழைக்கிறார்கள். நமது வெற்றித்தேர் நன்றாக ஓட வேண்டுமானால் அறிவுக்கூர்மை, உணர்வுப் பக்குவம், விடாமுயற்சி ஆகிய மூன்று குதிரைகளையும் நாம் நன்றாக வளர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
இந்த மூன்று குதிரைகளையும் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
நமது சூழலைப் புரிந்து கொண்டு, எப்படி அதற்கு ஏற்றபடி வாழ்வது? நமக்கு ஏற்றபடி சூழலை மாற்ற முயல்வது? எது சரியானது?boat
வாழ்க்கை எனும் ஓடம்,  வழங்குகின்ற பாடம்! மானிடரின் வாழ்வினிலே மறக்கவொண்ணா வேதம்!
ஒரு பழைய படப்பாடல் வரிகள்... கண்ணதாசன் வரிகளா?
‍தெரியவில்லை! ஆனால் நம் வாழ்வைப் பற்றிய பல உண்மைகளைப் புரிந்துகொள்ள இந்த ஒப்பீடு பயன்படும்! ஓடம் என்பது சிறிய படகு! பெரும்பாலும் ஒருவரோ, மிகச்சிலரோ ஓட்டிச் செல்லக்கூடியது!
நமது வாழ்க்கைப் படகை நாம்தான் ஓட்டிச் செல்ல வேண்டும்! நம் ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு தனிப்படகு, எங்கோ எப்போதோ தொடங்கிப் பயணம் செய்து, எப்போதோ முடியப்போகிற அல்லது மூழ்கப்போகிற ஒரு படகு!
நமது வாழ்க்கைப் படகை நாம்தான் ஓட்டியாக வேண்டும்! எப்படி ஓட்டுகிறோம்? எதை நோக்கி ஓட்டுகிறோம்? எவ்வளவு விரைவாக ஓட்டுகிறோம்? என்பதெல்லாம் நம்கையில்தான்.
ஆனால் அடிப்படையாக ஒன்றை நாம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்! ஓடம் அல்லது படகுதான் நம்கையில் இருக்கிறது. நம் வாழ்வு மட்டும்தான் நம் கையில் இருக்கிறது. அதை நாம் எப்படியும், எந்தத் திசையிலும், எந்த வேகத்திலும் ஒட்டலாம்!
அதுமட்டுமன்று! நம்மைப்போன்ற பல ஓடக்காரர்கள் அ‍தே ஓடையில் தங்கள் வாழ்க்கைப் படகை ஓட்டிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மைச் சுற்றிப் பயணம் செய்யும் இவர்கள் கூட எப்படித் தங்கள் ஓடங்களை ஓட்ட வேண்டும் என்று நாம் கட்டளை போட முடியாது. அவரவர் போக்கில் அவரவர் பயணம்!
இந்த ஓடங்களுக்கு நடுவில்தான் நாம் பயணம் செய்தாக வேண்டும். இப்பின்னனில் நம்முடைய வாழ்க்கைப் படகை நாம் எப்படி ஓட்டுகிறோம்?
நாம் ஓவ்வொருவரும் ‍எப்போதும் ஒரே மாதிரி நம் வாழ்க்கைப் படகை ஓட்டுவதில்லை. சில நேரம் வேகம், சில நேரம் சோர்வு இது இயற்கைதான்.  ஆனால் பெரும்பாலும் நம் வாழ்க்கை ஒரு பழக்கமான வழித்தடத்தில்தான் நகர்த்துகிறோம்.
பலரும் தங்கள் வாழ்க்கையை ஓடையின் போக்கிலேயே விட்டுவிடுகிறார்கள்! விதி விட்ட வழி என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்தால் சாகிறார்கள்!
சிலர் ஓடையும் காற்றும் சரியாக வரட்டும்... ஓடையில் மற்றப் பகுதிகளின் கூட்டம் குறையட்டும்... அமைதியான சாதகமான சூழல் உருவாகட்டும்... அதற்குப் பிறகு பயணம் செய்யலாம் என்று கரையில் ஒதுங்கிக் காத்துக் கிடக்கிறார்கள்! அலை ஓய்ந்தபின் குளிக்கப் போகறிவர்கள் இவர்கள். அலை எப்போது ஓய்வது? இவர்கள் எப்போது வாழ்வாங்கு வாழ்வது?
சிலர் படுவேகமாகப் பயணம் செய்ய முயல்கிறார்கள். ‍அதிவேகமாக முன்னேறுகிறார்கள்! பல சமயங்களில் பெரும் வெற்றியும் பெறுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஓடை இவர்களின் ஓடத்தையே கவிழ்த்து விடுகிறது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல எதிர்பாராத சூழல்களையும், வெள்ளங்களையும், புயல்களையும் சமுதாய ஓடை கொண்டு வரக்கூடும். ‍அதிக வேகம் அதிகமான விபத்துக்களுக்கும் இடமளிக்கும்.
சிலர் தங்கள் வாழ்க்கைப் படகு எந்தப் பக்கம், எப்படிப் போகவேண்டும், என்றெல்லாம் கனவு காண்பார்கள். திட்டம் போடுவார்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கைப் படகை, அப்பா, அம்மா, ஆசிரியர், நண்பர்கள், குடும்பத்தினர் என்று மற்றவர்கள் எல்லாம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.  அவரவர் சுமையை அவரவர் சுமந்தால் போதாதா? மற்றவர்களையே சார்ந்திருப்பவர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும்? சிலர் தத்தம் வாழ்க்கைப் படகை ஓட்டுவதை விட்டுவிட்டு மற்றவர்களைத் திருத்தவும் வழிகாட்டவும் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள்! ஊருக்காகப் போராடுகிறேன் என்று சொல்லிப் பலநேரம் தங்கள் வாழ்க்கைப் படகையே கவிழ்த்து விடுவார்கள்!
வேறு சிலர் மற்ற வாழ்க்கைப் படகுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், தங்கள் சுயநலம் ஒன்றையே மையமாக வைத்து முன்னேறுவார்கள். இந்தச் சுயநலமிகளுக்கு நட்புக் குறையும்! பகைமை பெருகும்! காலப்போக்கில் இவர்கள் பகைமைப் புயலில் சிக்கித் தவிப்பார்கள்.
மிகச் சிலர்தான், சமுதாய ஓடையின் நெளிவு சுளிவுகளை நன்றாகப் புரிந்துகொண்டு, தங்கள் வாழ்க்கைப் படகையும் செம்மையாக வழிநடத்தி, தங்களைச் சுற்றி இருப்பவர்களையும், சார்ந்து இருப்பவர்களையும் அரவணைத்துக்கொண்டு, தங்கள் வாழ்க்கை ஓடத்தில் வெற்றிகரமாகப் பயணம் செய்கிறார்கள்.
நம்முடைய வாழ்க்கைப் பயணமும் அப்படிப்பட்டதாக அமைய வேண்டுமா?
ஆசை, துன்பத்துக்கு அடித்தளமா? வளர்ச்சிக்கு வித்தா? ஆசைப்படுவது சரியா? தவறா?
மகிழ்ச்சி என்பது யாருக்குக் கிடைக்கிறது?pilab
பணக்காரர்களுக்கா? மனநிறைவோடு வாழும் ஏழைகளை நாம் பார்க்கவில்லையா? படித்துப் பட்டம் வாங்கியவர்கள் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? படிக்காதவர்கள்கூட எத்தனையோ பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே!
எல்லா வயதிலும், தரத்திலும் சிலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சிலர் ஏக்கப் ‍பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.      ஏன்? பலர் மகிழ்ச்சியாக இல்லை.
மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து வருவதில்லை! நமக்குள்ளேயே இயல்பாக மலர்வது.
உண்மையில் மனநிறைவுதான் மகிழ்ச்சி! நேற்றைய இழப்புகளையும், ‍தோல்விகளையும் பற்றிக் கவலைப்படாமல் வாழப் பழகுவதுதான் மகிழ்ச்சி!
மற்றவர்களிடம் இருப்பதற்கெல்லாம் ஆசைப்பட்டு ஏங்காமல், நமக்கு இன்று இப்போது இருக்கும் சுகங்களை அனுபவிப்பதுதான் மகிழ்ச்சி! ஏன் இன்றைய துக்கங்கள்கூடத் தற்காலிகமானவைதான் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவதுதான் மகிழ்ச்சி!
உண்மையில், ஆசை கூடாதா? ஆசையே இல்லாமல் வாழ முடியுமா? ஆசையே இல்லாமல் நாம் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்க முடியுமா?
வாழ்வின் அடித்தளமே ஆசைதான்! ஒவ்வொரு நொடியும் நாம் இன்னும் சிறப்பாக வாழவேண்டும் என்கிற ஆசைதான் நம்மை இயக்குகிறது!
இன்னும் ஒருபடி மேலே! இதுதான் தனிமனித வளர்ச்சிக்கே அடித்தளம்.
இந்த ஆசைக் கனவுகள்தான் இன்று நமது உடனடித் தேவை
இதைத்தான் இன்றைய குடியரசுத் தலைவர் தொடங்கி, உளவியல் வல்லுநர்கள் வரை பலரும் வலியுறுத்துகிறார்கள்!
எனவே மனநிறைவும் ஆசைக்கனவும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல! எதிரானவை அல்ல!
இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிப்போம். அதே நேரத்தில் இதைவிடச் சிறப்பான வாழ்வைப்பெற ஆசைப்படுவோம். இன்னும் செழிப்படைய கனவும் காண்போம்!
மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் இது!